தமிழகத்திற்கு 6.5 லட்சம் கோடி கொடுத்தவர் மோடி! கோவையில் நிதின் நபின் அதிரடிப் பேச்சு!
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர் பிரதமர் மோடிதான்; லஞ்ச ஊழலில் ஊறிப்போயுள்ள திமுக அரசாங்கம் மண்ணை விட்டு அகற்றப்பட வேண்டும்” என பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், பாஜக தொழில்துறை வல்லுநர் பிரிவு சார்பில் ‘Professional Connect 2026’ எனும் பிரம்மாண்ட கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பட்டாளமே திரண்டிருந்த இந்த நிகழ்வில், நிறைவுரையாற்றிய நிதின் நபின், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
கருத்தரங்கில் பேசிய நிதின் நபின், "உன்னத பாரதத்தை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது; குறிப்பாகத் தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கியுள்ளார்" என்றார். ஜிஎஸ்டி புரட்சியால் தொழில் வல்லுநர்கள் பெரும் பலன் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கோவைக்கு வந்தே பாரத் ரயில் மற்றும் டெக்ஸ்டைல் துறைக்கான சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும் நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகையில், "2004-2013 வரையிலான யுபிஏ ஆட்சியில் தமிழகத்திற்கு வெறும் 1 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் 6.5 லட்சம் கோடி ரூபாயைத் தமிழக வளர்ச்சிக்காக வழங்கியுள்ளது" எனப் புள்ளிவிவரங்களை அடுக்கினார்.
தொடர்ந்து திமுக அரசை விமர்சித்த அவர், "கொங்கு மண்டலம் முன்னேற்றத்திற்கான பகுதி; ஆனால் இங்குப் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கல்லூரி மாணவிகள் மீது அட்டூழியங்கள் நடைபெறுவதும், ஆன்மீகத்தைக் கொச்சையாகப் பேசுவதும் வேதனையளிக்கிறது" என்றார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவினர் தாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர்களின் பேச்சு அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாகவும் சாடினார். "காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழை உலகெங்கும் கொண்டு சென்றவர் மோடி. வளர்ந்த பாரதத்தை உருவாக்கவும், தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை அமைக்கவும் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்" என முழங்கிய அவர், 'வெற்றிவேல் வீரவேல்' மற்றும் 'ஜெய் தமிழ் ஜெய் பாரத்' எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
.jpg)