விஜய் வராததால் பொங்கலுக்கு புது ரூட்! நான்கு படங்களின் அதிரடி ரிலீஸ் அறிவிப்பு; ‘ஜனநாயகன்’ இடத்தைப் பிடிப்பது யார்?
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சிக்கல்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நான்கு படங்கள் பொங்கல் ரேசில் குதித்துள்ளன.
இந்தாண்டு பொங்கலுக்கு ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என இரண்டு மெகா படங்கள் மட்டுமே மோதும் என எதிர்பார்க்கப்பட்டதால், மற்ற படக்குழுவினர் தங்களது ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்திருந்தனர். ஆனால், விஜய்யின் கடைசிப் படம் சட்டப் போராட்டங்களால் முடங்கியுள்ள சூழலில், தற்போது கார்த்தி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து களமிறங்கியுள்ளன. இதனால் இந்தாண்டு பொங்கல் பந்தயம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதை அடுத்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம், தற்போது பொங்கல் விடுமுறையைக் குறிவைத்து வெளியாகிறது. அதேபோல், நடிகர் ஜீவா நடிப்பில் காமெடி கலந்த அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ஜனவரி 15-ஆம் தேதி வெளியாகிறது.
இது தவிர, இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி’ இரண்டாம் பாகமும் அதே ஜனவரி 15-ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதற்கிடையில், திரையரங்குகளை நிரப்பவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் நடிகர் விஜய்யின் பிளாக்பஸ்டர் படமான ‘தெறி’ மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜனவரி 15-ஆம் தேதியன்று ‘தெறி’யும் திரையரங்குகளில் வெளியாவதால், தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். ஆக மொத்தம், சிவகார்த்திகேயனின் பராசக்தியுடன் மோதுவதற்குத் தற்போது நான்கு படங்கள் வரிசையாக அணிவகுத்துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் ஒதுக்கீட்டில் தற்போது பெரும் போட்டி நிலவி வருகிறது.
