புக்கிங் தளங்களில் இருந்து திடீர் நீக்கம்; மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒட்டுமொத்தத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சட்டச் சிக்கல்களால் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகாது எனத் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் நிலவும் இழுபறி மற்றும் தணிக்கை வாரியத்தின் மறுசீராய்வுக் குழு தொடர்பான விவகாரங்களால், படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையைத் தளபதி தரிசனத்துடன் கொண்டாடக் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
எங்கள் கட்டுப்பாட்டை மீறிய சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் 'ஜனநாயகன்' படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" எனத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மிகுந்த மனவருத்தத்துடன் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் தாங்கள் முழுமையாக உணர்ந்திருப்பதாகவும், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையில், இப்படத்தை மலேசியாவில் விநியோகம் செய்யும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ (Malik Streams) நிறுவனமும் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், 'புக் மை ஷோ' (Book My Show) மற்றும் 'டிக்கெட் நியூ' (Ticket New) உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் இருந்து 'ஜனநாயகன்' படத்தின் பக்கங்கள் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளன. படத்திற்கான முன்பதிவு தொடங்காத நிலையில், புக்கிங் தளங்களில் இருந்து படத்தின் பெயரே மறைந்தது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை வாரியத்தின் சில ஆட்சேபனைகள் மற்றும் சட்ட ரீதியான நடைமுறைகளே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்துத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
