மேல்தட்டு மக்களுக்கு வங்கி வேலை, ஏழை மக்களுக்குத் துப்புரவுப் பணியா? - காங்கிரஸ் மாநாட்டில் கிளம்பிய எதிர்ப்பு முழக்கம்!
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் சார்பில் மாநில மாநாடு இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசியச் செயலாளர் ஜிதேந்திரா பேக்வால் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநிலத் தலைவர் வைத்தியலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மேடையில் உரையாற்றிய நாராயணசாமி, தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது தலைமையிலான அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தனது அரசியல் தாக்குதலைத் தொடுத்தார்.
மாநாட்டில் உரையாற்றிய நாராயணசாமி, முதலமைச்சர் ரங்கசாமி தனது தொகுதியில் உள்ள மேல்தட்டு மக்களுக்கு வங்கிப் பணிகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தூய்மைப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைகளையும் வழங்கிப் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார். “கடந்த காலங்களில் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் புதுச்சேரியில் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், எப்போது அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தாரோ, அன்றே புதுச்சேரி மாநிலத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டார்” என அவர் ஆவேசமாகப் பேசினார்.
மேலும் பேசிய அவர், எளிமையானவர் என்று தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ளும் ரங்கசாமி, தற்போது விலை உயர்ந்த சொகுசு மகிழுந்துகளில் வலம் வருவதாக எகத்தாளம் செய்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐடி கம்பெனி) புதுச்சேரிக்குக் கொண்டு வர முயற்சி செய்தபோது, அப்போதைய ஆளுநர் கிரண்பேடியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அத்திட்டங்களைத் தடுத்து நிறுத்தியவர்தான் ரங்கசாமி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “புதுச்சேரி மாநிலம் உண்மையான வளர்ச்சியை அடைய வேண்டுமென்றால் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தீர்வு. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் மட்டுமே புதுச்சேரிக்கு விடிவுகாலம் பிறக்கும்” என அவர் தனது உரையில் முழக்கமிட்டார்.
