சவுதி இளவரசர் வழங்கிய வைர நகைகளை மோசடி செய்ததாகத் தீர்ப்பு; மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு ஊழல் வழக்கில் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. ‘தோஷகானா-2’ (Toshakhana-2) என்று அழைக்கப்படும் இந்த ஊழல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, இம்ரான் கானின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு இம்ரான் கான் சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள், இம்ரானின் மனைவி புஷ்ரா பீபிக்கு விலை உயர்ந்த ‘பல்கேரி’ (Bulgari) வைர நகை செட் ஒன்றை பரிசாக வழங்கினார். சுமார் 7.15 கோடி ரூபாய் (பாகிஸ்தான் மதிப்பு) கொண்ட இந்த நகையை, அரசு கருவூலமான ‘தோஷகானா’வில் ஒப்படைக்காமல், அதன் மதிப்பை வெறும் 58 லட்சம் ரூபாய் எனக் குறைத்துக் காட்டி, முறைகேடாகச் சொந்தமாக்கிக் கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷாரூக் அர்ஜுமந்த், அரசு ஊழியராக இருந்து நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் என மொத்தம் 17 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தண்டனையுடன் சேர்த்து இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளுக்காக அதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், இந்தத் தீர்ப்பைத் திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என்று சாடியுள்ளார். அவரது வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த நீண்டகாலச் சிறை தண்டனை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
