பெரியார் என்கிற கடப்பாரை துருப்பிடித்துவிட்டது; திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு எதிரிகளைச் சாடிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்!
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் வாக்காளர் பட்டியல் நீக்கம் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘நறுக்’கெனத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். கருப்பு சிவப்பு உடையில் வந்திருந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "200 இடங்களில் வெற்றி பெற வேண்டுமல்லவா, அதற்காகத்தான்" என நகைச்சுவையாகப் பதிலளித்த சீமான், பின்னர் அரசியல் ரீதியாகப் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "வாக்குத் திருத்தம் என்ற பெயரில் ஒரே அடியாக ஒரு கோடி வாக்குகளை நீக்குவது எப்படித் திருத்தமாகும்? குறுகிய காலத்திற்குள் விடுபட்டவர்களை எப்படிக் கண்டறிந்து சேர்க்க முடியும்? வாக்கைக் காப்பாற்றுவதே இன்று மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. இது அதிகார வர்க்கத்தின் பொறுப்பற்ற செயலையே காட்டுகிறது" எனச் சாடினார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்துப் பேசிய அவர், "களத்திலேயே இல்லாத ஒருவரைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. களத்திற்கே வராதவர்கள் களம் குறித்துப் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. விஜய் கூறிய ஈரோட்டு கடப்பாரை (பெரியார்) இப்போது துருப்பிடித்துவிட்டது. விஜய்க்கு திமுக மட்டும்தான் எதிரி, ஆனால் எனக்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு எதிரிகள் இருக்கிறார்கள்" என்று அதிரடி காட்டினார்.
திமுக அரசின் விளம்பர அரசியலைக் கடுமையாக விமர்சித்த சீமான், "படிக்கும் பள்ளியை முறையாகக் கட்டத் துப்பில்லாதவர்கள், பல்லாயிரம் கோடிக்குத் திட்டங்களை அறிவிக்கிறார்கள். கொரோனா காலத்தில் தேவதைகளாகத் தெரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இன்று அரசுக்குத் தேவையற்றவர்களாகத் தெரிகிறார்கள். நாடே போராட்டக் களத்தில் இருக்கும்போது நல்லாட்சி தருகிறோம் எனப் பேசுவது வேடிக்கை" என்றார். மேலும், "ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லாரும் தூய சக்திகளாகி விடுகிறார்கள். 2021-ல் திமுகவுக்கு வாக்களித்துவிட்டு இப்போது விஜய் அவர்களைத் தீய சக்தி என்கிறார். மக்கள் கொள்கைகளுக்கு வாக்களிக்கவில்லை, நோட்டுக்குத்தான் வாக்களிக்கிறார்கள்" என வேதனை தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிரிழப்புகள் நேர்வது தவறு என்றும், அரசு இரு தரப்பையும் அழைத்துப்பேசித் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
