2,000 போலீசார் குவிப்பு - ட்ரோன்கள் பறக்கத் தடை; 7 கி.மீ தூரத்திற்குத் திமுதிமுவெனத் திரளும் தொண்டர்கள் - நெல்லை மாநகரம் விழாக்கோலம்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக இன்று காலை 11 மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து 'ரோடு மார்க்கமாக' நெல்லைக்கு வரும் அவருக்கு, மாவட்ட எல்லையான கே.டி.சி நகர் மற்றும் சாரதா கல்லூரி பகுதிகளில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் கிரகாம்பெல் மற்றும் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு முதலமைச்சருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர்.
மதியம் வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான 'கிறிஸ்துமஸ் பெருவிழா'வில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, இந்தச் சுற்றுப்பயணத்தின் மிக முக்கியமான நிகழ்வாக, ரெட்டியார்பட்டி மலைச் சாலையில் சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகத்தை' முதலமைச்சர் திறந்து வைக்கிறார். தமிழர்களின் பண்டைய நாகரிகத்தைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தைப் பேட்டரி கார் மூலம் அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். 7 கி.மீ தூரத்திற்குச் சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் மற்றும் வரவேற்பு பேனர்களால் நெல்லை மாநகரமே தற்போது மின்னிக் கொண்டிருக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, ரூ.639 கோடியில் காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். முதலமைச்சரின் வருகையையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி இன்று காலை முதல் நாளை மாலை வரை நெல்லை மாநகர எல்லைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.