ஜெயலலிதா என் ரோல் மாடல்; எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறந்த ஆட்சியாளர்! - பிரேமலதா அதிரடிப் பேச்சு! Premalatha Vijayakanth Jayalalithaa My Role Model, EPS Was a Great Ruler

ஜெயலலிதா என் ரோல் மாடல்; எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறந்த ஆட்சியாளர்! - பிரேமலதா அதிரடிப் பேச்சு! Premalatha Vijayakanth Jayalalithaa My Role Model, EPS Was a Great Ruler

இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடக்கிறது; ஓட்டுக்குக் காசு கொடுக்கப்படுகிறது - திருவாரூரில் பிரேமலதா விஜயகாந்தின் பகீர் குற்றச்சாட்டு!


அரசியல் களத்தில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் வெகுவாகப் பாராட்டிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் என்ற பெயரில் சுற்றுப்பயணங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாகத் திருவாரூர் வந்த பிரேமலதா விஜயகாந்த், இன்று தனியார் அரங்கில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திமுக ஆட்சியின் மீது கடும் விமர்சனம்

சமீபத்தில் முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய பிரேமலதா, முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈட்டியதாகக் கூறுகிறார். ஆனால், அந்த முதலீடுகள் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது என்பதை அவர் கூற வேண்டும். என்னென்ன திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரப்போகின்றன என்பது மக்கள் உணரும்போதுதான் அவரது பயணம் பாராட்டுக்குரியதாக இருக்கும், என்று விமர்சித்தார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கைச் சரி செய்ய வேண்டியது அவருடைய பொறுப்பு. தமிழகம் ஒரு பாதுகாப்பான பூமி என்பதை அவர் நிரூபிக்க வேண்டும், என்று ஆளும் அரசை நேரடியாகச் சாடினார்.

ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியைப் பாராட்டியது ஏன்?

தேர்தல் கூட்டணி குறித்துக் கேட்டபோது, ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று பிரேமலதா தெரிவித்தார். அதிமுக-திமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. இதுதான் உண்மை, என்று பதிலளித்தார்.

அதிமுக ஆட்சியின் மீதான தனது பார்வை குறித்துப் பேசும்போது, ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி, ஆளுமை மிக்க தலைவர். கட்சியையும் ஆட்சியையும் அவர் சிறப்பாக வழிநடத்தினார். அவர்தான் என்னுடைய அரசியல் ரோல் மாடல். அதேபோல், எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலமைச்சராக இருந்தாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டார். நான்கே ஆண்டுகளில் ஒரு சிறப்பான ஆட்சியை அவர் கொடுத்தார்," என்று இருவரையும் வெகுவாகப் பாராட்டினார்.

நாடு முழுவதும் வாக்குத் திருட்டு:

நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு பகிரங்கமாக நடைபெறுகிறது. ஓட்டுக்குக் காசு கொடுக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் இதுகுறித்துத் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நேர்மையான தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையமும், நீதித் துறையும் இணைந்து செயல்பட வேண்டும், என்று பரபரப்புக் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மேலும், மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் அவர் வரவேற்றார். ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி அடைவதாகவும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூட ஜிஎஸ்டியை வரவேற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ட்ரம்ப் நிர்வாகத்தை மோடி கையாண்ட விதம் குறித்தும் பாராட்டுத் தெரிவித்த பிரேமலதா, மோடி ட்ரம்ப்புக்கு மேஜிக் செய்கிறார். அமெரிக்கா வல்லரசு என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், எங்கள் கேப்டன் மட்டுமல்ல, இந்தியாவும் மிக விரைவில் வல்லரசாகும், என்று பேசி முடித்தார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks