கூடுதல் தொகுதி கேட்கும் மதிமுக.. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

கூடுதல் தொகுதி கேட்கும் மதிமுக.. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!


2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக தொகுதிகள் கேட்க உள்ளதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, ஈரோட்டில் நடைபெற்ற பொழுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் தற்போது திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 வது பொதுக்குழு

தமிழக அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது முழுவீச்சில் ஆயத்தமாக வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மதிமுக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கூட்டணி கட்சியான திமுகவிடமிருந்து பெற்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்களை பொதுக்குழுவில் மதிமுக நிறைவேற்றியுள்ளது 

ஈரோட்டில் மதிமுகவின் 31 வது பொதுக்குழுக்கூட்டம் செங்கோடம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் கட்சியின் பொதுசெயலாளர் வைகோ , முதன்மை செயலாளர் துரை வைகோ , மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் 1800 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பாணை உள்ளவர்கள் கடும் சோதனைக்கு பிறகு திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இரங்கல் தீர்மானம்

இதனையடுத்து பொதுக்குழு தொடங்கிய உடன் மறைந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் திருவுருவ படத்திற்கு வைகோ , துரை வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அகமாதபாத் விமான விபத்து, பெங்களூர் கிரிக்கெட் கொண்டாட்டம் ஆகியவற்றில் உயிரிழந்தவர்களுக்கும் , உயிரிழந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவித்து ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதிமுக கூட்டணி வரலாறு

திமுகவில் அங்கம் வகித்த வைகோ, 1993 ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், 1994 ம் மே - 6 ஆம் தேதி மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து மதிமுக தேர்தலை சந்தித்தது. 

1998-ல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது பம்பரம் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவிற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும், தேர்தல் சின்னத்துக்கும் அங்கீகாரம் கிடைத்தது.

பிறகு 1999-ல் அணி மாறியபோது திமுக தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை மதிமுக கூட்டணி இல்லாமல் தனித்து களம்கண்ட நிலையில், அந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. 2004 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் போட்டி, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் போட்டி என தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறிக்கொண்டே மதிமுக இருந்தது.

பின்னர் 2006 ஆம் ஆண்டு, அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டது. 2016 ஆம் ஆண்டு மீண்டும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஊழல் மிகுந்த கட்சி என்று கூறி மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், தேர்தலை சந்தித்து படு தோல்வியை சந்தித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் மீண்டும் இணைந்த மதிமுக, கடந்த 2021-ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆறு தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக தற்போது வரை அந்த கூட்டணியில் தொடர்கிறது. 

இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 1998 முதல் 2010 வரை மதிமுக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருந்ததை போல, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக, கூடுதல் தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் பெற்று போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

28 தீர்மானங்கள் நிறைவேற்றம்

முழு மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்தும் விதமாக படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், பல்வேறு சதிகள் மூலம் தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும், இருட்டடிப்பு செய்ய முயலும், பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான நிதிகளை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும், எந்த மாநிலத்திலும் இல்லாத வகைகளில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற சுற்றறிக்கை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2019-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக, 2021 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களிலும் தொடர்ந்து இந்த கூட்டணியிலேயே தொடர்ந்தது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மதிமுக கூறிவருகிறது. இந்நிலையில், மதிமுக பொதுக்குழுவில், குறைந்தது 12 தொகுதிகள் வேண்டும் என்று மதிமுக கூறியிருப்பது திமுக கூட்டணிக்குள் புயலையே கிளப்பியுள்ளது. இதற்கு திமுகவின் ரியாக்‌ஷன் என்ன என்பதை கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தான் பார்க்க முடியும்.
புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks