1. துணைவேந்தர்கள் நியமனம் எப்போது? – அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக ஆளுநரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

2. பெண் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா? – கள்ளக்குறுக்கியில் தவெக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக சுவரொட்டிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை என்றால், நடுத்தரப் பெண்களின் நிலை என்ன என்ற வாசகங்களுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3. மேட்டாத்தூர் ஐயப்பன் கோயிலில் கோலாகல கும்பாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சபரிமலை சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க, யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

4. குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம் – காலிக் குடத்துடன் பாஜக நிர்வாகி அரை நிர்வாணப் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளை பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிஜுவுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக சாலையின் நடுவே காலிக் குடத்துடன் அமர்ந்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

5. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெகவினர் – கன்னியாகுமரியில் பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிறப்பு உதவி ஆய்வாளரை வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் நபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மண்ணெண்ணெய் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக தவெக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்குள் புகுந்து, காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

6. நகை மோசடி வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது – குமரியில் கடையடைப்பு போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்ததாகக் கூறப்படும் இரட்டை சகோதரர்கள் விற்பனை செய்த நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மோசடி மற்றும் பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்ததாகக் கூறி, குமரி மேற்கு மாவட்ட நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் கடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

7. பழனி முருகன் கோயிலில் ரோப்கார் அவசரகால மீட்பு ஒத்திகை – அந்தரத்தில் சிக்கிய பக்தர்கள் மீட்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப்கார் அவசரகால மீட்பு மாதிரி ஒத்திகை நடைபெற்றது.

முதலில் தீயணைப்புத்துறையினர் மற்றும் ரோப்கார் ஊழியர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் பங்கேற்று, அந்தரத்தில் சிக்கிய பக்தர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

8. போலி பட்டா மூலம் பூர்வீகச் சொத்து அபகரிப்பு? – நடிகை ஷர்மிலி பரபரப்பு குற்றச்சாட்டு!

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தனது கணவருக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்தை போலி பட்டா மூலம் பெயர் மாற்றம் செய்து அபகரித்துள்ளதாக நடிகை ஷர்மிலி புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பத்திரப்பதிவாளர் உள்ளிட்ட பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

9. கோவையைத் தொடர்ந்து தென்காசி நூலகத்திலும் போலி புத்தகங்கள் – ரூ.28.5 லட்சம் மதிப்பில் கண்டுபிடிப்பு!

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் சுமார் ரூ.27.52 லட்சம் மதிப்பிலான 2,200 அகல் விளக்கு பப்ளிகேஷன் புத்தகங்களும், ரூ.97,476 மதிப்பிலான 93 பினிக்ஸ் பப்ளிகேஷன் புத்தகங்களும் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் போலி புத்தகங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது தென்காசி மாவட்ட மைய நூலகத்திலும் இத்தகைய புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10. பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் – கலெக்டர், எஸ்.பி. பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது, பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

11. தூக்கத்தில் ஸ்விட்ச் போர்டில் விழுந்த 8 மாதக் குழந்தை – மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தூக்கத்தில் ஸ்விட்ச் போர்டு மீது உருண்டு விழுந்த 8 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

12. சர்வதேச செஸ் போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்கள் – கோவில்பட்டி மாணவிக்கு உற்சாக வரவேற்பு!

ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவி துர்காஸ்ரீ சொந்த ஊர் திரும்பினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய மாணவி, பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் எனத் தெரிவித்தார்.

13. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்ட முழுமையான தடை – மீறினால் நடவடிக்கை!

மதுரை மாநகரின் தூய்மையைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளம்பரப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தடையின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. சுவர்கள், கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14. மூதாட்டியிடம் 13 சவரன் நகை கொள்ளை – தவெக நிர்வாகி கைது!

நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தவெக நிர்வாகி இசக்கிராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை மறைத்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் இசக்கிராஜா கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

15. உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது – நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு அறையின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.

அப்போது அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பழைய கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

16. புழல் மத்திய சிறையில் முன்னாள் டிஜிபி திரிபாதி ஆய்வு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக முன்னாள் டிஜிபி திரிபாதி மற்றும் சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17. பத்திரப்பதிவுத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு – ஆம்பூரில் பத்திர எழுத்தர்கள் 2-வது நாளாக போராட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பத்திரப்பதிவுத்துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு பேட்ஜ் அணிந்து இரண்டு நாட்கள் பத்திரப்பதிவு பணிகளைப் புறக்கணித்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் அலுவலகப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

18. பத்திரப்பதிவுத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு – பேர்ணாம்பட்டில் பத்திர எழுத்தர்கள் வேலைநிறுத்தம்!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பத்திரப்பதிவுத்துறையைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறையைத் தனியார் மயமாக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

19. சாத்தான்குளம் அருகே தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பிய பின்னரும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வீணாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இதனைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20. மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.2 லட்சம் நகை – நேர்மையுடன் ஒப்படைத்த பெண் ஊழியருக்குப் பாராட்டு!

திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் வரவேற்பறையில் தவறவிடப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பெண் ஊழியர் ஒருவர் நேர்மையுடன் ஒப்படைத்தார்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நகையைத் தவறவிட்ட குடும்பத்தினரை அழைத்து போலீசார் நகைகளை ஒப்படைத்தனர். நேர்மையுடன் செயல்பட்ட பெண் ஊழியருக்கு காவல் நிலையத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

21. கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் வீட்டைச் சேதப்படுத்திய காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்!

கோவை மாவட்டம் கதிர்நாயக்கன்பாளையத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று வீட்டைச் சேதப்படுத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்டனர். குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

22. கோவை வசந்தம் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் திடீர் பள்ளம் – விபத்து அபாயம்!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிவடைந்து புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பள்ளத்தைச் சுற்றிலும் செடிகள், கற்கள் மற்றும் பிளக்ஸ் வைத்து எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளனர். விபத்துகள் நிகழும் முன் மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

23. நெல்லை குமாரசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா – நூற்றாண்டு பழமையான நாதஸ்வர இசை!

நெல்லையில் அமைந்துள்ள குமாரசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழாவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த திமிரி நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய இசையுடன் நடைபெற்ற சிறப்பு வழிபாடு பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

24. பெண் கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவு – நீதிமன்றத்தால் தேடப்பட்ட குற்றவாளி கைது!

கரூரில் பெண் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெரால்டு என்பவர் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு கொலை வழக்கில் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்த அவர், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

25. பவானியில் 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு மாவட்டம் பவானி ராணா நகர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ.17 ஆயிரம் ரொக்கம், மூன்று செல்போன்கள், ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

26. 17 வயது சிறுமியைத் திருமணம் செய்ய வற்புறுத்தல் – காரில் கடத்தல்; 3 பெண்கள் உட்பட 15 பேர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைக்க மறுத்ததால், சிறுமியைக் காரில் கடத்திச் சென்றதாக மூன்று பெண்கள் உட்பட 15 பேர் மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து போலீசார் 15 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27. போடி அணைப் பிள்ளையார் அணைக்கட்டில் குளிக்க அனுமதி – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அணைப் பிள்ளையார் அணைக்கட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்டிருந்த குளியல் தடை, தற்போது நீர்வரத்து மிதமானதைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அணைக்கட்டில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

28. புதுக்கோட்டை கிராமங்களில் அதிகரிக்கும் சிட்டுக்குருவிகள் – மீண்டும் ஒலிக்கும் கீச்சுக்குரல்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிட்டுக்குருவிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக நிலையப்பட்டி, புல்வயல், சித்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வயல்வெளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகளவில் தென்படுகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிட்டுக்குருவிகளின் கீச்சுக்குரல் மீண்டும் ஒலிப்பது கிராம மக்களையும் இயற்கை ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

29. நரிக்குறவர் காலனி மக்களை அமர வைத்து கம்பால் மிரட்டல்? – போலீஸ் விசாரணை வீடியோ வைரல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரிக்குறவர் காலனியில், பொதுமக்களை ஒரே இடத்தில் அமர வைத்து கம்பைக் காட்டி மிரட்டி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களை கொத்தடிமைகள் போல அமர வைத்து சர்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்தியதாகக் கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30. நிலத்தகராறில் விவசாயியைத் தாக்கிய காவலர்? – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நிலத்தகராறு தொடர்பாக விவசாயி ஒருவரை காவலர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மலையூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியாற்றி வரும் பாதகுமார் மற்றும் மேலும் ஐந்து பேர் விவசாயியை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Source: Read Full Article