ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பவர்பேங்க் என்பது அத்தியாவசியமான சாதனமாக மாறிவிட்டது. குறிப்பாக பயணங்களின்போது பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடாமல் இருக்க அதிக திறன் கொண்ட பவர்பேங்க்களைப் பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் Portronics நிறுவனம் தனது புதிய Luxcell 100R பவர்பேங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 20,000mAh பேட்டரி திறன், அதிகபட்சமாக 100W சார்ஜிங் வசதி மற்றும் உள்ளிழுக்கும் வகையிலான Type-C கேபிள் எனப் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புதிய பவர்பேங்க் அறிமுகமாகியுள்ளது.

20,000mAh பேட்டரி திறன்.. 100W சார்ஜிங் வசதி

Portronics Luxcell 100R பவர்பேங்கில் 20,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, அதிக மின்சக்தி தேவைப்படும் லேப்டாப் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களையும் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இதன் Type-C போர்ட் மூலமாக அதிகபட்சமாக 100W பவர் அவுட்புட் கிடைக்கும். இதனால் 100W சார்ஜிங்கை ஆதரிக்கும் லேப்டாப்கள் உள்ளிட்ட சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்யும் வசதி கிடைக்கிறது.

உள்ளிழுக்கும் Type-C கேபிள்.. என்ன ஸ்பெஷல்?

இந்த பவர்பேங்கின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று இதில் வழங்கப்பட்டுள்ள உள்ளிழுக்கும் (Retractable) Type-C கேபிள் ஆகும். சுமார் 70 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த கேபிளை தேவையான நேரத்தில் வெளியே இழுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்பாடு முடிந்ததும் மீண்டும் பவர்பேங்கிற்குள் உள்ளிழுத்து வைத்துவிட முடியும். இதனால் தனியாக சார்ஜிங் கேபிளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறையும்.

மேலும், இந்த கேபிள் 20,000 முறைக்கும் அதிகமான உள்ளிழுத்தல் மற்றும் வெளியே இழுத்தல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், 20,000 முறைக்கும் அதிகமான வளைவுகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இதனை எடுத்துச் செல்ல வசதியாக லேன்யார்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுக்கு சார்ஜிங்

ஒரே நேரத்தில் இரண்டு அதிக மின்சக்தி தேவைப்படும் சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. உதாரணமாக, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம். பவர்பேங்கில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பேட்டரி சார்ஜ் இருக்கும்போது இரண்டு சாதனங்களுக்கும் தலா 65W என மொத்தம் 130W வரை அவுட்புட் வழங்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், பேட்டரி அளவு 70 சதவீதத்திற்குக் கீழே இருக்கும்போது இரண்டு சாதனங்களுக்கும் தலா 45W என சார்ஜிங் கிடைக்கும். இதில் இரண்டு Type-C போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு போர்ட்களையும் சாதனங்களை சார்ஜ் செய்யவும், பவர்பேங்கை மீண்டும் சார்ஜ் செய்யவும் பயன்படுத்த முடியும்.

PD 3.0, PPS ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

வேகமான சார்ஜிங்கை விரும்புபவர்களுக்காக Power Delivery 3.0 (PD 3.0) மற்றும் Programmable Power Supply (PPS) தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 65W இன்புட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பவர்பேங்கை மீண்டும் சார்ஜ் செய்யும்போதும் வேகமான சார்ஜிங் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

LED டிஜிட்டல் டிஸ்பிளே.. பாதுகாப்பு அம்சங்கள்

பவர்பேங்கில் எவ்வளவு பேட்டரி சார்ஜ் மீதமுள்ளது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள LED டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீதமுள்ள பேட்டரி அளவை சதவீத அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம்.

பாதுகாப்பிற்காக ஓவர்சார்ஜ் பாதுகாப்பு, ஷார்ட் சர்க்யூட் பாதுகாப்பு, தீப்பிடிப்பைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு கேசிங் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பவர்பேங்க் BIS சான்றிதழ் பெற்றுள்ளது.

iPhone முதல் MacBook வரை.. பல சாதனங்களுக்கு ஆதரவு

இந்த Portronics Luxcell 100R பவர்பேங்கை Android ஸ்மார்ட்போன்கள், iPhone, டேப்லெட்கள், iPad, MacBook மற்றும் பிற லேப்டாப்களுடன் பயன்படுத்த முடியும். கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விமானப் பயணத்தின்போது கேபின் பேக்கேஜில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய விதிமுறைகளின்படி விமானத்தில் இருக்கும்போது இதன் மூலம் சார்ஜிங் செய்வதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Portronics Luxcell 100R விலை எவ்வளவு?

இந்தியாவில் Portronics Luxcell 100R பவர்பேங்கின் அறிமுகச் சலுகை விலை ரூ.4,599 என நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அசல் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.11,999 ஆகும். அதேநேரத்தில் Amazon இந்தியா தளத்தில் ரூ.7,190 விலையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. விற்பனைத் தளத்தைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கலாம்.

இந்த பவர்பேங்கிற்கு நிறுவனம் ஒரு வருட வாரண்டியும் வழங்குகிறது. 20,000mAh பேட்டரி, 100W சார்ஜிங், உள்ளிழுக்கும் Type-C கேபிள் மற்றும் இரண்டு சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி எனப் பல அம்சங்களுடன் வெளியாகியுள்ள Portronics Luxcell 100R, ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லேப்டாப்பையும் சார்ஜ் செய்யக்கூடிய பவர்பேங்கைத் தேடுபவர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article