அல் அமீரகத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. சீனியர் அணி நியூசிலாந்து மண்ணில் தடுமாறி வரும் நிலையில், இந்த 2 கே கிட்ஸ் 339 ரன்களை சேஸ் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர்.

அசத்திய ஜுனியர்ஸ்:

இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஆசிய கோப்பையில் அசத்திய இந்திய வீரர்களை அணிகள் குறிவைக்கும் என்று கருதப்படுகிறது.

சேவாக் மகனுக்கு டிமாண்ட்:

இந்த தொடரில் அனைவராலும் உற்று கவனிக்கப்பட்ட வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவரே படைத்துள்ளார். அவர் மொத்தம் 5 போட்டிகளில் ஆடி 361 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 1 சதம், 3 அரைசதங்கள் அடங்கும். அவருக்கு அடுத்த படியாக பாகிஸ்தான் வீரர் உஸ்மான் கான் 345 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த தொடரில் இவர்கள் இருவர் தவிர வேறு யாரும் 300 ரன்களை கடக்கவில்லை. இந்திய அணியின் கேப்டன் ராய்சந்தனி 243 ரன்களும், வினித் 156 ரன்களும், அர்ஜுன் ராஜ்புத் நெருக்கடியான தருணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் விளாசியதால் அவர் 127 ரன்களும் இந்த தொடரில் எடுத்துள்ளனர்.

இந்த ஏலத்தைப் பொறுத்தமட்டில் பலரது கவனமும் சேவாக்கின் மகன் ஆர்யவீர் மீதே அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அவரது பேட்டிங் ஸ்டைலும் அதிரடியும் மிகவும் சிறப்பானதாக உள்ளது. அவரது தந்தை போல அதிரடியாகவும் அதேசமயம் அவரது தந்தையைக் காட்டிலும் கால்நகர்வுகள் சிறப்பாகவும் கொண்ட வீரராக உள்ளார்.

அணிகள் ஆர்வம்:

எதிர்கால இந்திய அணியில் ஆர்யவீர் ஒரு தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என்றே ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இதனால், மினி ஏலத்தில் அவர் ஏலத்திற்கு வந்தால் அவரை பெரிய தொகை கொடுத்து அணிகள் ஏலத்தில் எடுக்கத் தயாராகும் என்று கருதப்படுகிறது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு தற்போதே ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றனர். அவர்களது டிரேடிங்கில் வீரர்களை மாற்றுதல், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் புதியதாக நியமனம் என ஒவ்வொரு அணியும் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், தங்களது அணியை வலுப்படுத்தும் வகையில் ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் இஷன் சூட் மட்டுமே இந்திய அணிக்காக இந்த தொடரில் 10 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்திய வீரர் ஆவார். அவர் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 35 ஓவர்கள் வீசி 210 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். அவரும் சிறப்பாக பந்துவீசிய காவ்யா படேலும் ஏலத்தில் விலை போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இனி வரும் காலங்களில் இளம் வீரர்களை அதிகளவில் ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டும் என்பது உறுதியாகும்.

Source: Read Full Article