இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று மவுண்ட் மாங்கனேயில் நடைபெற்றது. இந்த போட்டியில் 334 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடிய இந்திய அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மிக மோசமாக தோல்வி அடைந்தது. இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியது.

இந்திய அணிக்கு பாடம்:

வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணியாக இந்தியா திகழ்ந்து வருகிறது. கடந்த கால ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்தியா சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் பேட்ஸ்மேன்கள் ரன்களை மலைபோல குவித்தனர். ஆனால், நேற்றைய போட்டி இந்திய அணிக்கு பல பாடங்களை கற்பித்துள்ளது.

அடுத்தாண்டு உலகக்கோப்பை தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளது. மைதானம் அங்கு சிறியதாக இருந்தாலும் அவர்களது மைதானமும் மிகுந்த சவாலானதாகவே அமையும். இந்திய மைதானங்களில் ரன்களை விளாசித்தள்ளியது போல அங்கு ரன்களை குவிக்க முடியுமா? என்பது மிகப்பெரிய சவால் ஆகும்.

மிடில் ஆர்டர் பரிதாபம்:

இதுதவிர இந்திய அணியின் பேட்டிங் என்பது கலவையான வீரர்களை நம்பி இல்லாமல் சிலரை நம்பியே இருப்பது கவலையாக உள்ளது. இந்தியாவின் கடந்த சில ஒருநாள் போட்டிகளை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலான ரன்களை குவித்தது டாப் ஆர்டர் வீரர்களாகவே உள்ளனர். சுப்மன்கில், விராட் கோலி, ரோகித் சர்மா இவர்கள் மிகப்பெரிய அளவில் ரன்களை குவித்தாலே அல்லது வலுவான அடித்தளம் அமைத்துச் சென்றால் மட்டுமே இந்திய அணி மிகப்பெரிய ரன்களை குவித்து வருகிறது.

ஒரு மோசமான சூழலில் இருந்து அணியை மிடில் ஆர்டர் மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற வரலாறு இந்திய அணியில் படைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது என்பதை நேற்றைய போட்டி உணர்த்தியுள்ளது. கடந்த காலங்களில் யுவராஜ், தோனி போன்றோர் அதை திறம்பட பல முறை செய்துள்ளனர். தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு தற்போது வரை ஒரு சிறந்த ஃபினிஷரோ, டெயிலண்டரில் சிறப்பாக ஆடும் ஆல்ரவுண்டரோ கிடைக்காமலே இருந்து வருகிறது.

நெருக்கடியில் கைகொடுக்காத வீரர்கள்:

இந்திய அணியில் சுப்மன்கில், ஸ்ரேயாஸ், அக்ஷர் படேல் என பல திறமையான இளம் வீரர்கள் இருந்தாலும் நெருக்கடியான சூழலை அணியை மீட்டு வெற்றி பெற வைத்த வரலாறு இதுவரை அரங்கேறவில்லை. அதுபோன்ற சாதனைகளை கபில்தேவ், சச்சின், டிராவிட், கங்குலி, தோனி, கோலி, யுவராஜ் போன்றோருக்கு பிறகு தற்போதைய இளம் வீரர்கள் யாரும் ஒருநாள் போட்டிகளில் அரங்கேற்றவில்லை.

நேற்று அப்படி ஒரு சாதனையை படைக்கும் வாய்ப்பு ஸ்ரேயாஸ், அக்ஷர், நமன்தீர், ருதுராஜ் கெய்க்வாட், இஷன் கிஷன் ஆகியோருக்கு கிடைத்தது. ஆனால், இந்த பொன்னான வாய்ப்பை அவர்கள் நழுவவிட்டனர். வெளிநாட்டு மண்ணில் தங்களது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி அவர்கள் நேற்றைய போட்டியில் அசத்தியிருந்தால் நீண்ட காலத்திற்கு வரலாற்றில் இடம்பிடித்திருப்பார்கள்.

காத்திருக்கும் உலகக்கோப்பை:

அதேசமயம், இந்திய அணியின் டாப் ஆர்டர் நிலைகுலைந்தால் இந்திய அணியின் மிடில் ஆர்டரால் சமாளிக்க இயலவில்லை என்பதும் நேற்றைய போட்டியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மிடில் ஆர்டரில் தற்போது அனுபவம் வாய்ந்த வீரராக கே.எல்.ராகுல் மட்டுமே உள்ளார். அவரும் நேற்றைய போட்டியில் இல்லாதது இந்தியாவிற்கு பலவீனமாக அமைந்தது.

ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி காயத்தில் சிக்குவதாலும், ரிஷப்பண்ட் உடற்தகுதியிலும் சிக்கல் இருப்பதாலும் அவர்களால் நிரந்தரமாக அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. அடுத்தாண்டு உலகக்கோப்பைக்கு அணியை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்பதையும், மிடில் ஆர்டரை வலுவாக்க வேண்டியதும் அவசியம் என்பதை நேற்றைய போட்டி இந்திய அணிக்கு பாடமாக கற்பித்துள்ளது.

தேவையில்லாத ஆக்ஷன்:

மேலும், இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் ப்ரார் தேவையில்லாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட விதமும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்று தேவையில்லாத வேலைகளைத் தவிர்த்துவிட்டு அணியின் வெற்றிக்கு மட்டும் முழு அளவில் கவனத்துடன் ஆட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: Read Full Article