தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது பட்டாசுகளே ஆகும். பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகை முடிந்தால் அது தீபாவளி கொண்டாடிய உணர்வே மக்களுக்கு இருக்காது.

காலை முதல் மழை:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை நாளான இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் பரவலாகவே மழை பெய்து வருகிறது.

தலைநகர் சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மழை வெளுத்து வாங்கி வருகிறது. பாரிமுனை, கோடம்பாக்கம், வடபழனி, ஆலந்தூர், கிண்டி, வளசரவாக்கம் என சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகிறது.

களையிழந்த தீபாவளி:

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் காரணமாக பட்டாசு வெடிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சிறுவர்கள், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும், இறைச்சி வியாபாரம், பட்டாசு விற்பனை, பூக்கள், பழங்கள் விற்பனை ஆகியவையும் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை விட்டுவிட்டுப் பெய்து வருவதால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இரவில் இடைவெளி இருக்குமா?

மழையின் தாக்கம் இன்று மட்டுமின்றி நாளையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காலை முதலே மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இரவு வேளையிலும் அதிகளவு மழை பெய்யும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால், தீபாவளி பண்டிகையன்று பகல் பொழுதைக் காட்டிலும் இரவு வேளையில்தான் அதிகளவு பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

சென்னைவாசிகளும் இரவு நேரத்தில் வெடி வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில் மழை இரவு நேரத்தில் பட்டாசு வெடிக்க இடைவெளி அளிக்குமா? என்று ஏக்கத்துடன் காத்துள்ளனர். சென்னை மட்டுமின்றி தென் தமிழகத்திலும் மழையின் தாக்கம் அதிகளவு உள்ளது.

மதுரை, நெல்லை,விருதுநுகர், தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு தொடர்ந்து அதிகளவு காணப்படுவதால் அவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Source: Read Full Article