தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை பெரும் உதவியாக இருந்து வருகிறது. மெட்ரோவில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் ஈஸியாக ஒரு இடத்தை சென்றடைய முடிகிறது. அதுவும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னை அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. ஆனால் மெட்ரோவில் சென்றால் எந்த கவலையும் இல்லாமல் செல்ல முடிகிறது.

சென்னை மெட்ரோ ரயில்

ஆகையால் தினந்தோறும் மெட்ரோ ரயிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து ஒவ்வொரு மாதமும் புதிய பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக விமான நிலையம், கோயம்பேடு,கிண்டி என பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பூந்தமல்லி வடபழனி இடையே தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் 1.08 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் 1.08 பேர் பயணம்

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1,08,23,408 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 16.10.2026 அன்று 4,51,705 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மஞ்சள் வழித்தடம்

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் 10,240,136 பயணிகளும், 14.64 கி.மீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையம் வரை செல்லும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் 5,83,272 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2026, அக்டோபர் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,05,718 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி (Single Journey Paper QR 22,52,397; ONDC – 13,95,128; Whatsapp - 4,74,602; Chennai One App – 4,26,780; Paytm 3,35,336; PhonePe – 1,76,364; Static QR 2,20,624; Online QR – 2,02,664; CMRL Mobile App (SVP) 1,33,795) பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கட்டணத் தள்ளுபடி

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article