முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. படுக்கை வசதி ரயில் பெட்டிகளில் பயணிகள் உறங்கும் நேரக் கட்டுப்பாடு விதிகளுக்கு எதிராக 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்திய இரயில்வே விதிகளின்படி, ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Sleeper, AC Coaches) பயணிகள் உறங்குவதற்கான அதிகாரப்பூர்வ நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஆகும். அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, கீழ் படுக்கைகள் (Lower Berths) மற்ற பயணிகள் அமர்வதற்கான பொதுவான இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நடுப்படுக்கையில் பயணிப்பவர்கள் இரவு 10 மணிக்குப் பிறகுதான் தங்கள் படுக்கையை உயர்த்திப் படுக்க வேண்டும்.

காலை 6 மணிக்கு மேல் அதை மடக்கி வைக்க வேண்டும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், உடல் நலம் சரியில்லாத தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை காரணம் காட்டி, பாலசுப்பிரமணியனின் மனைவி படுக்கை வசதியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக, 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, ஜி.அருள் முருகன் அமர்வு, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் எந்த நேரத்திலும் உறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியை சுட்டிகாட்டியுள்ளனர். அந்த விதி அமலில் இருக்கும் நிலையில், மனுதாரர் உதவிக்கு ரயில்வே போலீசார் அல்லது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியர்களை அழைத்திருக்கலாம். ஆனால் மனுதாரர் அவ்வாறு செய்யாமல் விதியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளதாக உத்தரவில் கூறியுள்ளனர்.

Source: Read Full Article