ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில், அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"தலைமுறைகள் கடந்த பிணைப்பை உருவாக்கியவர்"

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், சென்னைக்கு கோப்பைகளையும் வெற்றிகளையும் தாண்டி அளப்பரிய பலவற்றை வழங்கியவர் தோனி எனவும், தலைமுறைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைத்த ஓர் உணர்வையும், கிரிக்கெட்டின் எல்லைகளைக் கடந்து நிலைத்திருக்கும் ஓர் ஆழமான அன்புப் பிணைப்பையும் அவர் உருவாக்கினார் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒருநாள் முடிவு உண்டு என்பார்கள் ஆனால், தமிழ்நாட்டின் அன்புக்குரிய வளர்ப்பு மகனான தோனிக்கு, உண்மையிலேயே தகுதியான பிரியாவிடையை அளிக்க இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் எனவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"இனிய நினைவுகளை வழங்கியதற்கு நன்றி"

எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள், மகத்தான வெற்றிகள் மற்றும் என்றும் எங்கள் நினைவுகளில் நீங்காமல் நிலைத்திருக்கும் இனிய நினைவுகளை வழங்கியதற்கு தோனிக்கு நன்றி தெரிவித்துள்ள திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் சி.எஸ்.கே அணியின் வழிகாட்டியாக புதிய பயணம் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் அமைய மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் போட்டியை ஜெர்சி அணிந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article