மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பதை சாதனையாக கருத்துவது வெட்கக்கேடானது என்று கூறிய சீமான், சிறப்பு காட்சிக்கு அனுமதி என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது.

திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா?

தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?

அதிகாலை எழுந்து படியுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள்! அறிவை விரிவாக்குங்கள்! உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்! உழைத்து உயருங்கள்! என்று இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சிமுறையா? 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?

மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.

இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

ஆகவே, புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article