திருவாரூரில் சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், அவர் இறந்தது தெரியாமல் மனைவி கண்ணீருடன் அவரை எழுப்ப முயற்சித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் வடக்கு வடம்போக்கு பகுதியில் வசிப்பவர் சங்கர்ராமன் (80). இவருடைய மனைவி ஜெயா (50). இந்தத் தம்பதியினருக்கு கவிதா என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டது. சங்கர்ராமன் திருவாரூர் தெட்சுணாமூர்த்தி மடத்தில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

லாரி மோதி உயிரிழப்பு

இந்நிலையில், சங்கர் ராமன் இன்று திருவாரூர் தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் அருகே சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்திரார். அப்போது அந்த வழியாக வந்த திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம் முதியவர் ஓட்டி வந்த சைக்கிளின் மீது மோதியது. இதனால் தடுமாறி கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்துவிட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து, விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்ற நகர காவல் துறையினர் சங்கர் ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இறந்த கணவரை எழுப்பிய மனைவி

விபத்து நடைபெற்ற இடத்தில் சங்கர்ராமன் விழுந்து கிடந்த இடத்தில் அவரது மனைவி ஜெயா, அவர் இறந்து விட்டதை ஏற்க மறுத்து அரை மணி நேரத்திற்கு மேலாக அவரை எழுப்ப முயற்சித்த சம்பவம் அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Source: Read Full Article