தனது இல்லத் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், திமுக எம்பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரை திருமணம் கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. திராவிட இயக்கத் தலைவர் கீ.வீரமணி இந்தத் திருமணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். திராவிர இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், தனது பேத்தியின் திருமணம் ஏன் வைதீக முறைப்படி நடந்தது என்று துரைமுருகன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது பேத்தி திருமணம் குறித்து சில விளக்கங்களை கழகத் தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது யாதெனில்; கலைஞரின் அடியொற்றி, நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் எனது திருமணம், கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அதைப்போலவே, நான் முன்னின்று நடத்திய என் மகன் திருமணம் கலைஞர் தலைமையில் திருமணம் நடைபெற்றது என்பதை நாடே அறியும்.

அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி, தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாவும் - அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் - வைதீக முறைப்படியே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் எனது பேத்தியின் திருமணம் நடைபெற்றது.

எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இவ்வைதீக முறை திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article