கோவை, தென்காசியை தொடர்ந்து ராணிப்பேட்டை நூலகத்திலும் 2,400-க்கும் மேற்பட்ட போலி நூல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு சர்ச்சை

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு நிறைவுற்ற பெரியார் அறிவுலகத்தை கடந்த அக்.16 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்துவைத்தார். இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலக புத்தகக்கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாகவும், நூலாசிரியர் பெயர்கள் பல போலியானவை எனவும், குறிப்பிட்ட பதிப்பகத்தின் பெயரில் ஏராளமான போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் புத்தகக்கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்த நிலையில், அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

சர்ச்சையை கிளப்பிய போலி நூல்கள்

கோவை பெரியார் அறிவுலகம், தென்காசி மாவட்ட மைய நூலகத்தை தொடர்ந்து தற்போது ராணிப்பேட்டையிலும் போலி நூல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் உரிய ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் அகல்விளக்கு உள்ளிட்ட பதிப்பகங்களின் பெயர் கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலி நூல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் இந்நூல்கள் ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்டவை எனவும், இவை கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கொள்முதல் செய்யப்பட்டவை எனவும் கூறப்படுகிறது. இப்புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் மதிப்பு மட்டும் ரூ.27 லட்சத்திற்கும் மேல் எனக்கூறப்படுகிறது.

ராணிப்பேட்டையிலும் சிக்கிய போலிநூல்கள்

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆய்வில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட 2400-க்கும் மேற்பட்ட போலி நூல்கள் பறிமுதல் கண்டறியப்பட்டுள்ளன. அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 2399 போலி நூல்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 99 நூல்களும் சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் விஸ்வருபம் எடுத்துள்ள நிலையில், விசாரணை மேலும் விரிவடையும் என தெரியவருகிறது.

Source: Read Full Article