ஆரோவில்: இந்தியா – ஜெர்மனி இடையிலான கலாச்சாரம், கல்வி, இளைஞர் பரிமாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் மற்றும் சென்னையில் உள்ள ஜெர்மன் துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் மைக்கேல் ஹாஸ்பர் ஆகியோர் சர்வதேச நகரமான ஆரோவிலுக்கு வருகை தந்தனர்.

நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பயணத்தின்போது, ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்புப் பணி அதிகாரி (OSD) டாக்டர் ஜி. சீதாராமன், ஆரோவில் நகர மேம்பாட்டுக் குழு (ATDC) உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஜெர்மன் தூதுக்குழுவினரை உற்சாகமாக வரவேற்றனர்.

ஆரோவில் வளர்ச்சி குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்

இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆரோவில் நகர மேம்பாட்டுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளரும், குஜராத் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி ஐ.ஏ.எஸ்., காணொளி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார்.

ஆரோவிலுக்கு முதல் முறையாக அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்ட ஜெர்மன் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக்கை வரவேற்ற அவர், ஆரோவிலுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வரும் துணைத் தூதர் மைக்கேல் ஹாஸ்பருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் அடிப்படைத் தத்துவங்கள் குறித்து விளக்கிய டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, மனித ஒற்றுமை, ஒருங்கிணைந்த யோகம் மற்றும் மனித உணர்வின் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஆரோவில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், உலகளாவிய சவால்களுக்கு மாற்றுத் தீர்வுகளை உருவாக்கும் சர்வதேச அளவிலான முன்னோடிச் சோதனைக் களமாக ஆரோவில் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

98 சதவீதம் நிறைவடைந்த கிரவுன் சாலைப் பணிகள்!

தொடர்ந்து, ஆரோவிலின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஜெர்மன் தூதுக்குழுவினருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. ஆரோவிலின் குடியிருப்பு, தொழில்துறை, கலாச்சார மற்றும் சர்வதேச மண்டலங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் 4.4 கிலோமீட்டர் நீளமுள்ள வட்டவடிவ கிரவுன் சாலைப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இளைஞர் குடியிருப்புகள், நகர மண்டபம், மார்னிங் ஸ்டார் மகளிர் நல மையம் மற்றும் மனித ஒற்றுமைக்கான சர்வதேச ஆராய்ச்சி மையம் (CIRHU) உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

150 உற்பத்திப் பிரிவுகள், 700 குறு நிறுவனங்கள்!

நிலையான வளர்ச்சி மற்றும் சமூகத் தொழில்முனைவில் ஆரோவில் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் தூதுக்குழுவினருக்கு எடுத்துரைக்கப்பட்டது. கர்ம யோக உணர்வுடன் செயல்படும் ஆரோவிலில் 150 முக்கிய உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளும், 700 குறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் சூரிய சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாடு, சன்லிட் ஃபியூச்சர், புகழ்பெற்ற சோலார் கிச்சன், நிலையான கட்டிடக்கலை, கைவினைப் பொருட்கள், மர பொம்மைகள் மற்றும் இசைக்கருவிகள் ஆராய்ச்சி, உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற ஸ்வரம் மையம் ஆகியவை முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆரோவிலின் கல்வி முறைகள், இளைஞர்களின் தனித்திறன் வளர்ச்சி, அகத் தேடல் மற்றும் முழுமையான கல்வி அணுகுமுறைகள் குறித்தும் விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

இந்தியா – ஜெர்மனி கலாச்சார ஒத்துழைப்புக்கு புதிய திட்டங்கள்

இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று மற்றும் அறிவுசார் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை ஆரோவில் அறக்கட்டளை முன்மொழிந்தது.

குறிப்பாக, சமஸ்கிருதம் மற்றும் வேத இலக்கிய ஆய்வுகளில் ஜெர்மனி கொண்டுள்ள பாரம்பரியப் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆரோவில் இலக்கியத் திருவிழாவில் ஜெர்மன் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், பாரத் நிவாஸில் உள்ள 12 கலாச்சார அரங்குகளில் ஜெர்மன் கலை மற்றும் கலாச்சாரக் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஸ்ரீ அரவிந்தரின் கவிதைகள் மற்றும் ஜெர்மனியின் புகழ்பெற்ற சிந்தனையாளர்களின் இலக்கியப் படைப்புகளை இணைத்து இரு நாடுகளின் இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி பரிமாற்றத் திட்டம்

ஜெர்மன் பல்கலைக்கழக மாணவர்களையும் ஆரோவில் இளைஞர்களையும் இணைக்கும் வகையில் முறையான உள்ளுறைப் பயிற்சி, தன்னார்வத் தொண்டு மற்றும் இருதரப்பு மாணவர் பரிமாற்றத் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுதவிர, ஆரோவிலில் உள்ள சினிமா பாரடிசோவில் ஜெர்மன் திரைப்படங்களைத் தொடர்ந்து திரையிடுவது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு விளையாட்டுக் கலாச்சாரம் மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டங்களில் இணைந்து செயல்படுவது குறித்தும் முன்மொழியப்பட்டது.

மாத்ரிமந்திர், தோட்டங்கள் மற்றும் ஏரித் திட்டத்தைப் பார்வையிட்ட தூதர்

கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஜெர்மன் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் மற்றும் துணைத் தூதர் மைக்கேல் ஹாஸ்பர் ஆகியோர் ஆரோவிலின் ஆன்மிக அடையாளமாகத் திகழும் மாத்ரிமந்திரைப் பார்வையிட்டனர்.

அங்கு அமைந்துள்ள அமைதியான மாத்ரிமந்திர் தோட்டங்கள் மற்றும் 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி ஆரோவில் நிறுவப்பட்டபோது 124 நாடுகள் மற்றும் 23 இந்திய மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் ஒன்றிணைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திறந்தவெளி அரங்கத்தையும் பார்வையிட்டனர். மேலும், மாத்ரிமந்திர் ஏரித் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆரோவிலின் வளர்ச்சிக்கு ஜெர்மன் தொழிலதிபரின் பங்களிப்பு

இந்தப் பயணத்தின்போது ஆரோவிலின் நீண்டகால ஆதரவாளரும் ஜெர்மன் தொழிலதிபருமான மைக்கேல் போங்கேவையும் தூதுக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். மாத்ரிமந்திரின் தங்கத் தகடுகள், மாத்ரிமந்திர் ஏரித் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், கிரவுன் சாலை மற்றும் ஆரோவிலின் தற்சார்பு வளர்ச்சியை மேம்படுத்தும் தொழிற்பேட்டைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ஆரோவிலின் தொழிற்பேட்டையில் அமையவுள்ள மிகப்பெரிய நிலையான ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

மீண்டும் டிசம்பரில் ஆரோவில் வருகை தரும் ஜெர்மன் தூதர்!

தனது ஆரோவில் பயணம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக், 1990-களின் தொடக்கத்தில் மாணவராக இருந்தபோது முதன்முறையாக ஆரோவிலுக்கு வந்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார். அப்போது பார்த்த ஆரோவிலுக்கும் தற்போது வளர்ச்சியடைந்துள்ள ஆரோவிலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

தத்துவம் மற்றும் இறையியல் துறைகளில் தனக்குள்ள கல்விப் பின்னணியையும் பகிர்ந்து கொண்ட அவர், ஆரோவில் நிறுவனர்களின் ஆன்மிகத் தொலைநோக்குப் பார்வை மீது தனக்கு ஆழ்ந்த ஆர்வம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், வரும் டிசம்பர் மாதம் மீண்டும் ஆரோவிலுக்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பயணம் இந்தியா – ஜெர்மனி இடையிலான கலாச்சார, கல்வி, இளைஞர் பரிமாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஆரோவில் அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source: Read Full Article