நாட்டில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் 2029ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிறது.

உத்தரபிரதேச தேர்தல்:

ஏனென்றால், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் உத்தரபிரதேசமும் ஒன்றாகும். மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இது மக்களவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் ஒரு சக்தியாகும்.

உத்தரபிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக-வை வீழ்த்தி மீண்டும் அரியணையில் அமர அகிலேஷ் யாதவ் காய் நகர்த்தி வருகிறார். அங்கு சமாஜ்வாதியின் கூட்டணியில் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

படுதோல்வி அடைந்த காங்கிரஸ்:

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கர்நாடகம், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்ட்ரா என 4 மாநிலங்களில் நடந்த சட்டமேலவை இடங்களுக்கான தேர்தலில் படுதோல்வி காங்கிரஸ் அடைந்துள்ளது. மொத்தம் தேர்தல் நடந்த 28 இடங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. தாங்கள் ஆளுங்கட்சியாக உள்ள கர்நாடகவிலே படுதோல்வி அடைந்துள்ளனர்.

அகிலேஷ் கணக்கு:

காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சியும் தோல்வியும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கடந்த முறை பாஜக-விற்கு எதிராக உத்தரபிரதேசத்தில் பலரும் பிரிந்து தனித்தனியே போட்டியிட்டதால் வெற்றி பெற இயலவில்லை என்று தேர்தல் முடிவுகள் காட்டியது. இதனால், இந்த முறை பாஜக-விற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க அகிலேஷ் யாதவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ்நாட்டில் நடந்தது:

காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் கூட்டணி வைக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் கேட்கும் இடங்கள் கூட்டணி தலைமைக்கு சற்று அதிருப்தியை உருவாக்கும் வகையிலே அமைந்து வருவதாக தொடர் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். மேலும், தற்போது தவெக-வுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் தோற்ற 23 இடங்கள் என்பது திமுக ஆட்சியை இழப்பதற்கான ஒரு காரணமாகவும் மாறியது.

செல்வாக்கை காங்கிரஸ் பெரியளவில் இழந்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் காங்கிரசிற்கு அதிக இடம் கொடுத்து கூட்டணியில் சேர்த்து தேர்தலைச் சந்திக்க அகிலேஷ் யாதவ் தயக்கம் காட்டி வருகிறார். அவர்கள் கேட்கும் அளவிற்கு தொகுதிகளை ஒதுக்காமல் சட்டமேலவை இடங்கள் தோல்வி, தமிழ்நாட்டில் நடந்தது ஆகியவற்றை கருதி சமாஜ்வாதி அளிக்கும் இடங்களுக்கு சம்மதித்தால் மட்டுமே அவர்களுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று அகிலேஷ் யாதவ் கருதி வருகிறார்.

என்ன முடிவு எடுக்கப்போகிறார் அகிலேஷ்?

கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 399 இடங்களில் நின்று 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 21 லட்சத்து 51 ஆயிரத்து 234 வாக்குகளை கைப்பற்றியது. இந்த வாக்குகள் என்பது பல தொகுதிகளின் முடிவுகளை மாற்றும் ஆற்றல் கொண்டது. இதனால், இதையும் அகிலேஷ் யாதவ் கருத்தில் கொண்டு சிந்தித்து வருகிறார். இல்லாவிட்டால் காங்கிரஸ் இல்லாமலே தேர்தலை எதிர்கொள்ளலாமா? என்றும் ஆலோசித்து வருகிறார்.
இதனால், உத்தரபிரதேசத்தில் இனி நாளுக்கு நாள் அரசியல் களமும், கூட்டணி வியூகமும் அனல் பறக்கும்.

Source: Read Full Article