அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள்.

விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர் இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்று கந்தசஷ்டி விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா பழனி மலைக்கோயிலில் நவம்பர் 10-ந் தேதி நாளை மறு நாள் மதியம் 12 மணிக்கு உச்சிகாலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ந் தேதி மாலை நடைபெறும்.

அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். மாலை 3 மணிக்கு சின்னக்குமார சுவாமி அசுரர்களை வதம் புரியம் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் கோவில் சன்னதி அடைக்கப்படும்.

தொடர்ந்து திருஆவினன்குடி கோயிலில் பராசக்திவேலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்க முகாசூரன் வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும்.

அன்று இரவு 9 மணிக்கு ஆரிய மண்டபத்தில் வெற்றிவிழாவைத் தொடர்ந்து சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று சம்ரோக்‌ஷணம் மற்றும் அர்த்தஜாமபூஜை நடைபெறும். விழா நிறைவாக நவம்பர் 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கும், இரவு 8 மணிக்கு மேல் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். கந்த சஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருமண விழாவை கண்டு கழித்தபின் தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்

Source: Read Full Article