திருவள்ளூர் : ஆவடியில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட ஐடிஐ மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்திய நடத்துநரை, மாணவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஐடிஐ மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடிக்கு அடுத்துள்ள கன்னியம்மன் நகரில் இருந்து 61K என்ற வழித்தட எண் கொண்ட அரசு பேருந்து, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல கல்வி நிறுவனத்தில் பயிலும் ஐடிஐ மாணவர்கள் சிலர் பேருந்தில் ஏறியுள்ளனர்.

பேருந்தில் ஏறிய மாணவர்களில் சிலர், உள்ளே செல்லாமல் பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கவனித்த பேருந்து நடத்துநர் சர்வேசன், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உள்ளே வருமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

கதவை மூட முடியாமல் தவித்த ஓட்டுநர்

இதற்கிடையே, பேருந்தின் பின்பக்க கதவை மூடுமாறு நடத்துநர், ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஓட்டுநர் பலமுறை முயற்சி செய்தும் பின்பக்க கதவை மூட முடியவில்லை. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

மாணவர்கள் தொடர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்ததால் அதிருப்தியடைந்த நடத்துநர் சர்வேசன், குறிப்பிட்ட ஓரிடத்தில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். பின்னர் கீழே இறங்கி பேருந்தின் பின்பக்க பகுதிக்குச் சென்று, மாணவர்களை படிக்கட்டில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தியதுடன், கதவை சரிசெய்யவும் முயன்றுள்ளார்.

அப்போது, பேருந்தின் பின்பக்க கதவு மூடாமல் இருப்பதற்காக மாணவர்கள் அதில் கல்லை வைத்து தடுத்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர், அந்தக் கல்லை அகற்றியதுடன், மாணவர்களைக் கண்டித்துள்ளார்.

நடத்துநருடன் மாணவர்கள் வாக்குவாதம்

இதனால் மாணவர்களுக்கும் நடத்துநர் சர்வேசனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அப்போது பிரச்சினை முடிவுக்கு வராமல் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேருந்து கன்னடபாளையம் பகுதியில் சென்றபோது மீண்டும் மாணவர்கள் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்கள் நடத்துநர் சர்வேசனை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் முன்னிலையிலேயே நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பேருந்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அறிவுறுத்திய நடத்துநருக்கே இந்த நிலை ஏற்பட்டது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

அரசு பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பேருந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால் வந்த மற்ற அரசு பேருந்துகளும் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுவழியில் அணிவகுத்து நின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு சீரானது.

வைரலான வீடியோ – 2 மாணவர்கள் கைது

இதனைத் தொடர்ந்து, அரசு பேருந்து நடத்துநரை ஐடிஐ மாணவர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது.

இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அரசு பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதையடுத்து, நடத்துநரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு ஐடிஐ மாணவர்களை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டதைத் தட்டிக்கேட்ட நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம், அரசு பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் பொறுப்பான நடத்தை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

Source: Read Full Article