மேலூர் அருகே வீட்டில் வெடி விபத்து: சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் உயிரிழப்பு – தாய், மகன் படுகாயங்களுடன் சிகிச்சை ; போலீசார் தீவிர விசாரணை!

தீபாவளிக்கு வீட்டில் வைத்திருந்த பட்டாசு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தில் நேற்று இரவு வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததில், வீட்டின் மேல் தளம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரில், கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், தாய் மற்றும் மகன் இருவர் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்த யோகவாணி (42) என்பவரது வீட்டில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த யோகவாணி, அவரது மகன் லோகேஷ் (20) மற்றும் அவரது நண்பர் மனோஜ் (20) ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.

மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இதையடுத்து மூவரும் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யோகவாணி மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். லோகேஷ் மற்றும் மனோஜ் இருவரும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர்.

கொட்டாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் வெடிபொருட்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தகவலறிந்த மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கொட்டாம்பட்டி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article