என் பொண்டாட்டிக்கு மெசேஜ் பண்ண நீ யாரு ?

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் கேட்டரிங் மற்றும் கப்பல் மாலுமி பயிற்சியை முடித்து விட்டு , தற்போது வீட்டில் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார்.

இவரது பாட்டி மெரினா என்பவர் கீழ சண்முகபுரம் பகுதியில் வசித்து வருகிறார். எனவே வேலையில்லாமல் இருந்த சுபாஷ் அடிக்கடி பாட்டி வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரது மனைவியுடன் சுபாஷ் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சுபாஷும் அந்தப் பெண்ணும் சிறு வயது முதலே ஒன்றாகப் பள்ளியில் படித்துப் பழகியவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிதம்பரம் "என் பொண்டாட்டிக்கு மெசேஜ் பண்ண நீ யாரு ?" என கூறி தனது மனைவியுடனான இன்ஸ்டாகிராம் தொடர்பைத் துண்டிக்குமாறு பலமுறை எச்சரித்ததாகத் தெரிகிறது. இருப்பினும் , சுபாஷ் தொடர்ந்து தனது மனைவிக்கு மெசேஜ் அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

" பயங்கர சத்தத்துடன் வெடித்த பாட்டில் "

இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் , தனது நண்பரான டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வினிஸ்டனுடன் சேர்ந்து கீழ சண்முகபுரம் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, சுபாஷின் வீடு என நினைத்து அவரது பாட்டி மெரினா வசிக்கும் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாட்டில் வீட்டின் முன்பாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதுடன் , அப்பகுதியில் தீப்பற்றியது.

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து மண்ணெண்ணெய் குண்டு வீசியதாகக் கூறப்படும் சிதம்பரம் மற்றும் வினிஸ்டன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில், இன்ஸ்டாகிராம் தொடர்பு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறில், இளைஞரின் பாட்டி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article