இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் குழுமம் அதானி குழுமம். பல துறைகளிலும் கோலோச்சி வரும் அதானி குழுமம் பசுமை எரிவாயு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களது தராலி நீரேற்று சேமிப்புத் திட்டம் மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

தராலி நீரேற்று புனல் மின்திட்டம்:

மகாராஷ்டிராவில் உள்ள தராலி நீரேற்று சேமிப்புத் திட்டத்தின் செலவை குறைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தராலி நீரேற்று புனல் மின் திட்டத்தின் திட்டச் செலவைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் சட்டப்பூர்வக் கடமைகளைக் குறைக்க நிறுவனம் முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் தெரிவித்துள்ளது.

மொத்த செலவு எவ்வளவு?

வனத்துறை மற்றும் வனவிலங்கு இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பம் தள ஆய்வுப் பணிகளுக்காக மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. மாநில வனவிலங்கு வாரியம், இத்திட்டத்தின் மொத்தச் செலவாக 5 ஆயிரத்து 675 கோடி ரூபாயை கணக்கில் எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தள ஆய்வுச் செலவுகள் திட்டத்தின் மொத்தச் செலவில் சுமார் 1 சதவீதம் மட்டுமே என்பதால், 56 புள்ளி 75 கோடி ரூபாய் என்பது தள ஆய்வு மற்றும் கணக்கெடுப்புப் பணிகளுக்கான செலவு மட்டுமே என ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

புலிகள் வழித்தடத்திற்கு பாதிப்பா?

மேலும், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான செலவுகளைக் குறைப்பதற்காகவே திட்டச் செலவு திருத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் தவறானது என நிறுவனம் தெரிவித்துள்ளது. தராலி நீரேற்று புனல் மின் திட்டம் முழுவதுமாகத் தனியாருக்குச் சொந்தமான, வனப்பகுதி அல்லாத நிலத்தில் அமைந்துள்ளதாகவும், இது கோய்னா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இடையகப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ளதாகவும், புலிகள் வழித்தடத்தை எந்த வகையிலும் பாதிக்கவோ அல்லது அதன் எல்லையை ஒட்டியிருக்கவோ இல்லை என்றும் கூறியுள்ளது. அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தையும் பாதிக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காக எந்தவொரு பாதுகாக்கப்பட்ட பகுதியும், காப்புக்காடும் அல்லது அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமும் அதன் வரையறையில் மாற்றப்படவில்லை என்றும் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article