சென்னை: 20% அரசு கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களே இல்லை என்றும் மொத்தம் 7198 காலியிடங்களை உதவி பேராசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7198 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி தரவுகள் திரட்டப்பட்ட கல்லூரிகளில் 20% கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களே இல்லை; மேலும் 20% கல்லூரிகளில் தலா ஒரு நிரந்தர ஆசிரியர் மட்டுமே பணி செய்கின்றனர். அரசு கல்லூரிகளின் அவல நிலையையே இவை அம்பலப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 181 அரசு கலைக் கல்லூரிகளில், புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகள் தவிர மீதமுள்ள கல்லூரிகளில் மொத்தம் 11,909 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7198, அதாவது 61% பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி விகடன் குழுமம் விண்ணப்பித்து பெற்ற தரவுகளில் அரசு தெரிவித்துள்ளது. இவை தவிர புதியக் கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகள் ஆகியவற்றுக்கு சுமார் 2000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றையும் சேர்த்தால் மொத்த பணியிடங்கள் 13,909 ஆகவும், காலியிடங்களின் அளவு 66%, அதாவது 9,198 ஆகவும் அதிகரிக்கும்.

முழுமையான தரவுகள் கிடைக்கப் பெற்ற 31 கல்லூரிகளில் வேடச்சந்தூர், அருப்புக்கோட்டை, தரகம்பட்டி, திருமயம், மணப்பாறை, கொளக்காநத்தம் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு கல்லூரிகளில் ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர் கூட இல்லை; அனைத்து பணியிடங்களும் காலியாக உள்ளன. இராமேஸ்வரம், பரமக்குடி, குத்தாலம், சேந்தமங்கலம், ரெட்டியார்சத்திரம், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள 6 அரசு கல்லூரிகளில் தலா ஒரு நிரந்தர ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். திருவாடானை உள்ளிட்ட 5 கல்லூரிகளில் தலா 2 நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கிட்டத்தட்ட பல்கலைக்கழகத்திற்கு இணையான கட்டமைப்பு கொண்ட கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள 190 ஆசிரியர் பணியிடங்களில் 105 இடங்கள் காலியாக உள்ளன. நாமக்கல், திண்டுக்கல் கல்லூரிகளிலும் 100&க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

ஒரு காலத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் சிறப்பாக இருந்தது. அந்தக் கல்லூரிகளில் சேர கடுமையான போட்டி நிலவியது. இப்போது அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் சீரழிந்து விட்டதால் அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வருவதில்லை. நடப்பாண்டில் மொத்தமுள்ள 1,30,348 இளநிலை படிப்புகளுக்கான இடங்களில் 97,287 மட்டுமே நிரம்பியிருக்கின்றன. சுமார் 25% இடங்கள் நிரம்பவேயில்லை. முதுநிலைப் படிப்புகளில் 24,859 இடங்களில் 14,252 மட்டுமே நிரம்பியுள்ளன. 43% இடங்கள் காலியாக உள்ளன.

இந்த அவல நிலைக்கு காரணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாதது தான். இந்த சிக்கலை கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி உரிய புள்ளி விவரங்களுடன் விளக்கி வருகிறது. ஆனால், அதற்கு எந்த பயனும் இல்லை. கடைசியாக கடந்த 2014&ஆம் ஆண்டில் அரசு கல்லூரிகளுக்கு 957 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின் 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஒரே ஓர் ஆசிரியரைக் கூட அதிமுக, திமுக அரசுகள் நியமிக்கவில்லை.

கடந்த திமுக ஆட்சியின் நிறைவில் 2708 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்துவதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டிருப்பதால் இன்று வரை நியமனங்கள் நடைபெறவில்லை. முந்தைய திமுக ஆட்சியின் நிறைவில் வெறும் 5 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதுடன் நடவடிக்கை முடங்கிக் கிடக்கிறது.

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் 3 கட்டங்களாக 6000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார். ஏற்கனவே போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட 2708 உதவிப் பேராசிரியர் பனியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், புதிய ஆள்தேர்வு அறிவிக்கைகளை வெளியிட முடியாது. தமிழக அரசு நினைத்தால், உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் கட்டுரை வடிவிலான விடைத்தாளை மட்டும் சரியான வழிகாட்டுதலுடன் மறுமதிப்பீடு செய்ய முடியும். அவ்வாறு செய்தால், இந்த சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, அதை செய்யாமல் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இழுத்தடிக்கவே விரும்புகிறது. இதனால், புதிய ஆசிரியர்கள் நியமனம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாத்தியமாகும் அறிகுறி தென்படவில்லை.

ஒரு காலத்தில் உயர்கல்வி கோயில்களாக திகழ்ந்த அரசு கலைக் கல்லூரிகள் இப்போது ஆசிரியர்கள் இல்லாமல் முடங்கிக் கிடப்பது தமிழகத்திற்கு நன்மை பயக்காது. அக்கல்லூரிகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்றால், அவற்றில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2708 உதவிப் பேராசிரியர் நியமனத்தில் உள்ள சிக்கல்களைக் களைவதுடன், மீதமுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article