சென்னை: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 2-வது கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (Special TET) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக நவம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான 2-வது கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி வெளியிட்டது.

இந்தத் தேர்வில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த ஆசிரியர் தேர்வு வாரியம், புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களும் 2-வது கட்ட சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2025-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்டு, தற்போது தொடர்ந்து பணியாற்றி வரும் தகுதியான ஆசிரியர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 19 வரை கால அவகாசம்

புதுச்சேரி ஆசிரியர்கள் இந்தச் சிறப்பு டெட் தேர்வுக்கு நவம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 2-வது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்க விரும்பும் புதுச்சேரி ஆசிரியர்கள், கடைசி நாளுக்காகக் காத்திருக்காமல் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு டெட் தேர்வுக்கான தகுதிகள், தேர்வு நடைமுறை மற்றும் இதர விவரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Source: Read Full Article