விழுப்புரம்: விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பொறியியல் பணிகள் காரணமாக, நவம்பர் 11, 14, 17 உள்ளிட்ட தேதிகளில் பல்வேறு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும். விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, சென்னை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பல விரைவு ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் தாமதமாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தம்!

நவம்பர் 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (66045), முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் (66046), பிற்பகல் 1.37 மணிக்கு முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பகுதியளவில் ரத்து!

நவம்பர் 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (66019), விழுப்புரம் - சேர்ந்தனூர் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்த ரயில் விழுப்புரத்திற்குப் பதிலாக சேர்ந்தனூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.48 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கம்!

பொறியியல் பணிகள் காரணமாகப் பல்வேறு விரைவு ரயில்களும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதத்திற்குப் பிறகு இயக்கப்பட உள்ளன.

நவம்பர் 11: புதுச்சேரி - ஹவுரா அதிவேக விரைவு ரயில் (12868), பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு வழியில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

நவம்பர் 12: ஜோத்பூர் - மன்னார்குடி விரைவு ரயில் (22673), ஜோத்பூரிலிருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்பட்டு வழியில் சுமார் 120 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

நவம்பர் 13: சார்லப்பள்ளி - நாகர்கோவில் சிறப்பு ரயில் (07535), இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு வழியில் சுமார் 100 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

நவம்பர் 17: மதுரை - சென்னை எழும்பூர் வைகை அதிவேக விரைவு ரயில் (12636), காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு வழியில் சுமார் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

நவம்பர் 17: சென்னை எழும்பூர் - மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (12635), பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு வழியில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

நவம்பர் 11, 18, 25: நரசாபூர் - தூத்துக்குடி விரைவு ரயில் (06020), காலை 4 மணிக்குப் புறப்பட்டு வழியில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

நவம்பர் 19: கரக்பூர் - விழுப்புரம் அதிவேக விரைவு ரயில் (22603), பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு வழியில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

சென்னையிலிருந்து புறப்படும் ரயில்களின் நேரத்திலும் மாற்றம்!

சில ரயில்களின் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர் 11, 14: சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட வேண்டிய எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (16127), இந்த இரு தேதிகளிலும் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்படும்.

நவம்பர் 14: புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய புதுச்சேரி - காக்கிநாடா துறைமுகம் சர்க்கார் விரைவு ரயில் (17656), பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும்.

நவம்பர் 11: விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (66019), பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 17: சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்பட வேண்டிய எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவேக விரைவு ரயில் (12605), மாலை 4.40 மணிக்குப் புறப்படும்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு!

விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாகப் பயணிகள் ரயில் ரத்து, பகுதியளவு ரத்து, புறப்படும் நேர மாற்றம் மற்றும் விரைவு ரயில்களின் காலதாமதம் உள்ளிட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, நவம்பர் 11 முதல் குறிப்பிட்ட தேதிகளில் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், புறப்படும் நேரம் மற்றும் ரயில் இயக்கம் தொடர்பான விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Source: Read Full Article