ராஜஸ்தானின் பாரம்பரியத்தையும், கலாசாரப் பெருமையையும் உலகுக்கு எடுத்துரைக்கும் அம்மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கரில், சர்வதேச புஷ்கர் திருவிழா -2026 கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பாரம்பரியக் கொடியேற்றம் மற்றும் ஆன்மிகச் சடங்குகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த விழா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.... வண்ணமயமான கொண்டாட்டங்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்டமான கால்நடை அணிவகுப்புகள் எனப் பாலைவன நகரமான புஷ்கர் விழாக்கோலம் பூண்டுள்ளது..

ஒளிவெள்ளத்தில் மிளிர்ந்த படித்துறை

வரும் நவம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் தொடக்கமாக புஷ்கர் ஏரியின் கரையில் அமைந்துள்ள 52 புனிதப் படித்துறைகளிலும் நடைபெற்ற மகா ஆரத்தி, விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஒளிவெள்ளத்தில் மிளிர்ந்த படித்துறைகள் பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. இதனுடன் ராஜஸ்தானிய நாட்டுப்புற நடனங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

களைகட்டியுள்ள கால்நடை சந்தை

ஆன்மிகக் கொண்டாட்டங்களை கடந்து, கால்நடைச் சந்தைதான் புஷ்கர் திருவிழாவின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள், குதிரைகள், மாடுகள், எருமைகள் எனப் பல்வேறு கால்நடைகள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக, விலங்குகளின் விலையும் அவற்றின் தனித்துவமான தோற்றமும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.

ரூ. 21 கோடி மதிப்பிலாக குதிரை

ரூ. 21 கோடி மதிப்புடையதாகக் கூறப்படும் பாதல் என்ற குதிரையின் வருகை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாவலர்கள் புடைசூழ கம்பீரமாக அழைத்து வரப்பட்ட இந்தக் குதிரையைக் காண ஏராளமானோர் திரண்டனர். இதேபோல், மகாராஷ்டிராவிலிருந்து அழைத்து வரப்பட்ட ஆர்.டி.எக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஆகிய இரண்டு குதிரைகளும் திருவிழாவின் நட்சத்திர நாயகர்களாக வலம் வருகின்றன. இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் இந்த இரு குதிரைகளுக்கும் தலா 5 கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கவனத்தை ஈர்த்த குரேஷி குதிரை

அதேபோல், பர்பத்சார் பகுதியிலுள்ள குரேஷி குதிரைப் பண்ணையிலிருந்து அழைத்து வரப்பட்ட தேவ்னூர் என்ற புகழ்பெற்ற நுக்ரா இனக் குதிரையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படும் இந்தக் குதிரை விற்பனைக்காக அல்லாமல் கண்காட்சிக்காக மட்டுமே அழைத்து வரப்பட்டுள்ளது. குதிரைகள் மட்டுமின்றி, பிரம்மாண்டமான எருமைகளும் திருவிழாவின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாக உள்ளன. இரண்டரை வயதே ஆன அமன் என்ற எருமை, சுமார் ஆயிரத்து 500 கிலோ எடையுடன் உள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது..

குள்ள மாடு - குதிரைகள்

தென்னிந்தியாவின் பாரம்பரிய இனமான பூங்கனூர் குள்ள மாடுகளும் புஷ்கர் திருவிழாவில் தனி கவனம் பெற்றுள்ளன. இவை, நாளொன்றுக்கு சுமார் 3 லிட்டர் வரை பால் கொடுக்கும் என வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்காட்லாந்தின் ஷெட்லாண்ட் தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஷெட்லாண்ட் குள்ளக் குதிரைகளும் பார்வையாளர்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும் கவர்ந்துள்ளன.

எனினும் திருவிழாவில் கால்நடைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. பிக்கப் வாகனத்திலிருந்து வெளியேற முயன்ற குதிரையின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விலங்குகள் மீதான துன்புறுத்தலுக்கு எதிரான விமர்சனங்களை பெற்றுள்ளன. மேலும், கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அச்சமடைந்த எருமை ஒன்று திடீரென ஓடியதால், விழா மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கால்நடை பாதுகாப்பு குறித்த கவலை

ஆன்மிகம், பாரம்பரியம், கால்நடைச், சுற்றுலா எனப் பல்வேறு சிறப்புகளை ஒருங்கே கொண்ட இந்த புஷ்கர் திருவிழா, ராஜஸ்தானின் கலாசார அடையாளத்தை ஆண்டுதோறும் உலகுக்கு எடுத்துரைத்து வருகிறது. அதேநேரத்தில், கொண்டாட்டங்களுடன் கால்நடைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் திருவிழா நினைவூட்டுகிறது...

Source: Read Full Article