தஞ்சாவூர்: தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தகுதியான மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ரேஷன் கடைகளை தற்காலிகமாக நடத்த கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பணியாளர் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் ஏராளமான பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளன. கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 1,714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 கட்டுநர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 1,890 பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்று பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சில ரேஷன் கடைகளில் பணிச்சுமை அதிகரித்து, பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகிப்பதிலும் சிரமங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உரிய காலத்தில் வழங்குவதில் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது அரசுக்கு முக்கியமான சவாலாக இருந்து வருகிறது.

இந்த காலிப்பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்புவதற்கு உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு காலதாமதம் ஏற்படக்கூடும் என்பதால், நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக மகளிர் சுயஉதவிக் குழுவினரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடை செயல்பாடுகள் குறித்து பயிற்சி பெற்ற தகுதியான மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அவர்கள் காலியாக உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தேவைப்படும் இடங்களில் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டப் பணிகளிலும் இவர்களை தற்காலிகமாக ஈடுபடுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மகளிர் சுயஉதவிக் குழுக்களைத் தேர்வு செய்வதற்கு தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புற வார்டு பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அந்தக் குழு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வர வேண்டும். முறையான தர மதிப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும். வங்கிகளில் பெற்ற கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும். மேலும், குழுவின் வரவு, செலவு உள்ளிட்ட கணக்குப் பதிவேடுகளை முறையாகப் பராமரித்து வந்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் குழுக்களிலிருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரேஷன் கடையில் விற்பனையாளர் பணியை மேற்கொள்ள விரும்பும் உறுப்பினர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியிலேயே வசிப்பவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடாது.

கல்வித்தகுதி, உள்ளூர் வசிப்பிடம், சுயஉதவிக் குழுவின் செயல்பாடு மற்றும் நிதி ஒழுங்கு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்மூலம் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், ரேஷன் கடைகளின் அன்றாடப் பணிகளையும் தடையின்றி மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும். பொது விநியோகத் திட்டத்தின் நோக்கம், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் நடைமுறைகள், மின்னணு குடும்ப அட்டைகளில் கைரேகை அங்கீகாரம் பெறும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்தும் விளக்கப்படும். அதுமட்டுமின்றி, ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களைப் பராமரித்தல், விற்பனைப் பதிவேடுகளை முறையாகப் பதிவு செய்தல், விற்பனைத் தொகையை உரிய முறையில் செலுத்துதல், பொதுமக்களின் புகார்கள் மற்றும் குறைகளைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளிலும் பயிற்சி அளிக்கப்படும். ரேஷன் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் நடத்தை விதிகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும்.

இதற்கிடையே, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களை ரேஷன் கடைகளில் தற்காலிகமாகப் பணியமர்த்துவதற்கு சில முக்கிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கம் நிர்ணயிக்கும் ரூ.10 ஆயிரம் பிணை வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். மேலும், ரூ.1 லட்சம் உத்தரவாதக் காப்பீடு தொடர்பான நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். ரேஷன் கடைகளின் பணிகளை மேற்கொள்ளும்போது பொருட்களின் இருப்பு, விற்பனைத் தொகை மற்றும் கணக்குப் பதிவுகள் ஆகியவற்றில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கவனமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதையும் கூட்டுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரந்தர விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமிக்கப்படும் வரை மட்டுமே மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால், தற்காலிகமாகப் பணியாற்றும் உறுப்பினர்கள் நிரந்தரப் பணி உரிமையையோ அல்லது நிரந்தர நியமனத்தில் முன்னுரிமையையோ கோர முடியாது. நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டவுடன் தற்காலிகப் பணி ஏற்பாடு முடிவுக்கு வரும்.

கூட்டுறவுத்துறையின் இந்த புதிய நடவடிக்கை ஒருபுறம் ரேஷன் கடைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என்றும், மறுபுறம் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு தற்காலிக வருவாய் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பொதுமக்களுக்கு மாதந்தோறும் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தேர்வு நடைமுறைகள் மற்றும் பயிற்சிகளை மாவட்ட அளவில் விரைவுபடுத்தி, காலியாக உள்ள ரேஷன் கடைகளில் பணிகளைச் சீரமைக்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

Source: Read Full Article