இந்தியர்களின் பிரதான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு செயல்படுகிறது. ஆதார் கார்டில் நம் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது. அப்போது தான் அரசின் நலத்திட்டங்கள் நமக்கு எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும். ஆதார் கார்டில் பெயர் மாற்றம் அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI முழுமையாக மாற்றி அமைத்துள்ளது.

இதன்படி ஆதார் கார்டில் பெயரை மாற்றம் செய்ய என்னென்ன ஆவணங்கள் வழங்கலாம் என்பதற்கான புதிய பட்டியலும் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.பெயரில் உள்ள எழுத்துப்பிழைகள், திருமணம் அல்லது விவாகரத்திற்கு பின் பெயர் மாறுவது மற்றும் முழுமையான பெயர் மாற்றம் என ஒவ்வொரு வகை மாற்றத்திற்கும் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இந்த புதிய வழிகாட்டுதல்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

சிறிய அளவிலான பெயர் திருத்தங்கள்: ஒரு நபரின் உண்மையான அடையாளம் மாறாமல், பெயரில் செய்யும் சிறிய திருத்தங்கள் இதில் அடங்கும். அதாவது Expanding initials, adding Middle name, sur name, சிறிய எழுத்துப்பிழை திருத்தங்கள் ஆகியவை இதில் வரும். இதற்கு பொருத்தமான அடையாள சான்று (Proof of Identity - PoI) சமர்ப்பிக்க வேண்டும்.

தரவு உள்ளீட்டு தவறு: ஆதாரில் ஏற்கனவே சமர்ப்பித்த ஆவணங்களில் பெயர் சரியாக இருந்தும், தரவு உள்ளீடு செய்யும் போது தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கு தனி நடைமுறை உள்ளது. பெரியவர்களுக்கு Annexure B பிரமாண பத்திரத்துடன் அடையாள சான்று அல்லது உறவுமுறை சான்று வழங்க வேண்டும். ’

சிறுவர்களுக்கு: பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் Annexure C பிரமாண பத்திரத்துடன் உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணம் மற்றும் விவாகரத்திற்கு பின் பெயர் மாற்றம்: திருமணம் அல்லது விவாகரத்திற்கு பின் தங்களது பெயரை மாற்ற விரும்பும் பெண்களுக்கு புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. Annexure D பிரமாண பத்திரத்துடன் அடையாள சான்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த பிரமாண பத்திரம், பெயர் மாற்றம் என்பது திருமணம் அல்லது விவாகரத்தால் மட்டுமே நிகழ்கிறது என்பதையும், அது தனிநபரின் அடையாளத்தை மாற்றவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

எளிய திருத்தங்கள்: சில எளிய திருத்தங்களுக்கு எந்தவிதமான ஆதார ஆவணங்களும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என UIDAI அறிவித்துள்ளது. ஆங்கில எழுத்துகளில் தற்செயலாக மாறி இருக்கும் எழுத்து வடிவங்களை சரிசெய்வது. உதாரணமாக RaMesh என்பதை Ramesh என மாற்றுவது, பெயர்களில் உள்ள புள்ளிகளை நீக்குவது அதாவது R.P. Singh என்பதை RP Singh என மாற்றுவது ஆகியவற்றுக்கு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை.

ஒரு நபர் தனது முழு பெயரையும் மாற்றுவது அல்லது தனது அடையாளத்தையே முற்றிலுமாக மாற்றுவது போன்ற பெரிய மாற்றங்களுக்கு அரசிதழ் அறிவிப்பு கட்டாயம். இந்த பெயர் திருத்தங்கள் அனைத்தும் அருகிலுள்ள ஆதார் சேவை மையங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய myAadhaar தளம் முகவரி மாற்றத்திற்கு மட்டுமே உதவுகிறது. எனவே பெயர் மாற்றத்திற்கு மக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டி இருக்கும்.

Source: Read Full Article