"தாமாக முன்வந்து வழக்கு"

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் விஷமாகி வருவதாக , நாளிதழ்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் , தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் , தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா , வல்லுனர் குழு உறுப்பினர் சுதிர்குமார் சதுர்வேதி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு ;

செம்பரம்பாக்கம் ஏரி நீர் தொடர்பான புகார்கள் குறித்து , மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், மாசு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அதை சரி செய்வதற்கான நீண்டகால வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

"ஒரு மாதத்திற்கு தடுத்து நிறுத்த வேண்டும்"

செம்பரம்பாக்கத்தில் 12 இடங்களில் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்ததில் , குறிப்பிட்ட வகை பாக்டீரியா நீரில் கலந்திருப்பது , மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை , ஒரு மாதத்திற்கு தடுத்து நிறுத்த வேண்டும் என, சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்கு , மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக குடிநீர் வாரியம், நீர்வளத் துறை ஆகியவை விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு, நவம்பர் 6 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article