TN Govt Free Bus Handicapped: விரைவு , டீலக்ஸ், மலைப்பகுதி பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணிக்க, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை கொண்டிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை:

கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் குறிப்பிட்ட பேருந்து வகைகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, விரைவுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளை தவிர்த்து அனைத்து வகையான பேருந்துகளிலும், மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விலையில்லா பேருந்து சேவையை தங்களுக்கும் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். அந்த வகையில் தான் மாற்றுத்திறனாளிகளும் இனி கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவு:

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாற்றுத்திறனாளிகளும் இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், மலைப்பகுதி பேருந்துகளிலும் முற்றிலும் கட்டணமின்றி பயணிக்கலாம். அதற்கு கைவசம்UDID அட்டை இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்து தவிர அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா பயண சேவையை, 21 வகையான மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பேருந்துகளில் விலையில்லா பயணம்:

இனி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளிலும், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம்.

மாநகர / நகர பேருந்துகள்

விரைவு பேருந்துகள் (Express)

LSS, டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள்

புறநகர் (Mofussil) பேருந்துகள்

மலைப்பகுதி சாதாரண கட்டண பேருந்துகள் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக)

இவை அனைத்திலும் 40 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும், தங்களது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை (UDID - Unique Disability ID Card) காண்பித்து, துணையாளர் ஒருவருடன் 100% கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். தனியாக செல்ல இயலாதவர்கள் துணையாளருடன் செல்லவும் அனுமதி உண்டு.

அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:

பேருந்தில் ஏறும் போது கண்டிப்பாக *UDID அட்டையை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும்.

அட்டை இல்லாமல் இலவச பயணம் கிடையாது.

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பதினாறு இலக்க எண் கொண்ட (மாதிரி - TNxxxxxxxxxxxxxx) UDID அட்டை மட்டுமே ஏற்கப்படும்

இலவச பயணச் சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும். இதன் மூலம் எவ்வளவு பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது என கணக்கிட முடியும்

ஏற்கனவே உள்ள 75 விழுக்காடு கட்டண சலுகையும் தொடரும்

நிதி ஒதுக்கீடு விவரங்கள்:

2026-2027-ம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.95 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.19 கோடி சேர்த்து மொத்தம் ரூ.114 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த விரிவாக்கத்திற்காக கூடுதலாக ரூ.7 கோடியே 90 லட்சம் மட்டும் ஒதுக்கீடு செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. இது ஒரு "புது துணைப்பணி" என்பதால் சட்டமன்ற பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். அதுவரை எதிர்பாரா செலவின நிதியில் இருந்து முன்பணம் பெற்று செலவு செய்யவும், நிதித்துறை ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Source: Read Full Article