அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்த திட்டத்துக்கு முழுமையான விதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்

இந்நிலையில், TAPS திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக ஜூன் 16-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது 2026 ஜனவரி 1ம் தேதி முதல் ஓய்வு பெற்ற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகிய இரண்டில் எது அதிகமோ அந்த தொகையுடன் அகவிலைப்படி நிவாரணத்தையும் சேர்த்து இடைக்கால ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!

ஓய்வூதியம் கணக்கிடும் முறையில் மாற்றம்

மேலும், பணியில் இருக்கும்போதே உயிரிழந்த தகுதியுடைய அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இந்த இடைக்கால ஓய்வூதியப் பலன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 11-ம் தேதி விஜய் அரசின் நிதித்துறை வெளியிட்ட கடிதத்தில், இடைக்கால ஓய்வூதியம் கணக்கிடும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி 18 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலத்துடன் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 மற்றும் அதற்குரிய அகவிலைப்படி நிவாரணம் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அகவிலைப்படி நிவாரணம்

அதேசமயம், 18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகியவற்றில் எது அதிகமோ அந்த தொகையுடன் அகவிலைப்படி நிவாரணம் வழங்கும் நடைமுறை தொடரும் என குறிப்பிடப்பட்டது. மேலும், 18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்கெனவே 30 சதவீத அடிப்படையில் கூடுதல் இடைக்கால ஓய்வூதியம் வழங்கப்பட்டிருந்தால், அந்த கூடுதல் தொகையை செப்டம்பர் மாதம் முதல் 10 சமமான தவணைகளில் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: School Student: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ உள்ளிட்டவைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அக்டோபர் 15-ம் தேதி அரசு கல்லூரி ஆசிரியர்களும் இந்த உத்தரவைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அருண் ராய், கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அக்டோபர் 16-ம் தேதி புதிய கடிதம் அனுப்பியுள்ளார். அதில், செப்டம்பர் 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரவை வாபஸ் பெற்ற அரசு

அதற்குப் பதிலாக ஜூன் 16-ம் தேதி அரசாணையின் படி குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய தகுதியான ஓய்வூதியர்களுக்கு கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணத்தைச் சேர்த்து இடைக்கால ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்யும் நடவடிக்கைகளை உடனே நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இடைக்காலமாக வழங்கப்பட்ட தொகைக்கும் TAPS விதிகளின்படி இறுதியாக வழங்கப்பட வேண்டிய தொகைக்கும் வித்தியாசம் இருந்தால் அது பின்னர் சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article