தமிழ்நாட்டில் பருத்தியானது இயல்பாக 1.27 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு சுமார் 2.50 இலட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் நூற்பாலைகளின் தேவையை ஓரளவேனும் நிறைவு செய்யும் வகையில், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஊக்குவித்து பருத்தி சாகுபடியை விரிவுபடுத்துவதன் மூலம் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது இன்றியமையாததாகும். இதனை கருத்தில் கொண்டு, 2026-27ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய, மாநில அரசு நிதிப் பங்களிப்புடன் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' ஐந்தாண்டுத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

திட்டத்திற்கான அரசாணை வெளியீடு

பருத்தியில் ஒரு எக்டருக்கான மொத்த உற்பத்தியை மேம்படுத்தவும், குறுகிய மற்றும் உகந்த காலத்திற்குள் காய்கள் முதிர்ந்து அறுவடைக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நெருக்க நடவு சாகுபடி மற்றும் அடர்நடவு சாகுபடித் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பருத்தியின் தரம் மற்றும் நூற்புத் திறனை பருத்தி இழையின் நீளமே நிர்ணயிக்கிறது. பிரீமியம் ஆடைகள், மிருதுவான துணிகள் மற்றும் உயர்தர வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் தயாரிப்பதற்கு ஏற்ற மெல்லிய மற்றும் உயர்தர நூல்களைத் தயாரிக்க மிக நீண்ட இழைப் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளது. மிக நீண்ட இழைப் பருத்திக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இத்தகைய கூறுகளைக் கொண்ட பருத்தி உற்பத்தித்திறனுக்கான இயக்கத்தின் வாயிலாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தினைச் செயல்படுத்த ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதியும் முதல் தவணையாக ரூ.10.48 கோடிக்கு நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!

விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பருத்தி உற்பத்தித் திறனுக்கான இயக்கத்தின்கீழ் நெருக்க நடவு சாகுபடி செயல்விளக்கத்திற்கு எக்டர் ஒன்றிற்கு ரூ.14,000 அடர்நடவு சாகுபடி செயல்விளக்கத்திற்கு எக்டர் ஒன்றிற்கு ரூ.18.500, மிக நீண்ட இழைப்பருத்தி உற்பத்தி செயல்விளக்கத்திற்கு எக்டர் ஒன்றிற்கு ரூ.9,500 ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கத்திற்கு எக்டர் ஒன்றிற்கு ரூ.7,500 ஆகிய செயல்விளக்கங்களுக்குத் தேவைப்படும் பருத்தி விதைக்கான பின்னேற்பு மானியம், திரவ உயிர் உரம், உயிரி கட்டுப்பாட்டுக் காரணி, மெபிகுவாட் குளோரைடு (பயிர் வளர்ச்சி சீராக்கி), பருத்தி நுண்ணூட்ட உரம், TNAU பருத்தி பிளஸ் (வளர்ச்சி ஊக்கி), அசாடிராக்டின் (பூச்சி விரட்டி) அறுவடை ஆட்கூலிக்கான பின்னேற்பு மானியம் ஆகியவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகள்

மேலும், பயிர் பாதுகாப்பு மற்றும் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதற்கான வாடகை கட்டணமாக எக்டர் ஒன்றிற்கு ரூ.1,500 பின்னேற்பு மானியமாகவும், பயிர் மேலாண்மை சார்ந்த விவசாயிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டமானது பருத்தி அதிகம் பயிரிடப்படும் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல். கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் பலன்களைப் பருத்தி விவசாயிகள் பெருமளவு பெற்றுப் பயனடையக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி திட்டத்திற்கு விண்ணப்பித்துப் பலன்களைப் பெறலாம் என வேளாண்மை-உழவர்நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்கள்.

Source: Read Full Article