சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து 5 மாத காலத்திற்குள் தமிழக அரசியல் களம் இடைதேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அந்த வகையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் வருகிற 6ஆம் தேதியும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் கடந்த 5 மாத தவெக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் தேர்தலாக உள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான தவெக எதிர்கட்சிகளான திமுக, அதிமுக,கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என 5 முனை போட்டியானது நீடிக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேடையில் கண்ணீர் விட்டு அழுத சத்யபாமா

இந்த நிலையில் அதிமுகவில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு அந்த பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமாவிற்கு தவெக சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் முதலமைச்சர் விஜய் மதுராந்தகத்தில் பிரச்சாரத்தை முடித்த நிலையில், நேற்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் விஜய் பேசுவதற்கு முன்னதாக தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமா பேசினார்.

ஒரு பெண் என்றும் பாராமல் சமூக வலைதளங்களில் தன்னை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசுவதாகவும், தான் அம்மாவுக்கு உண்மையாக இருந்ததாகவும் கூறி கண்கலங்கி அழுதார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும் பேசியிருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய், வேட்பாளர் சத்தயபாமாவை அமைதிப்படுத்தி ஆறுதல் தெரிவித்தார்.

ராஜமோகனுக்கு வந்த போன் கால்

இந்த நிலையில் வேட்பாளர் சத்யபாமா கண்கலங்கி அழுததை விமர்சிக்கும் வகையில் திமுக, அதிமுக உள்ளிட்ட ஐடிவிங் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று பரவியது. அதில் சத்யபாமா மேடையில் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் இருந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒரு போன் கால் வந்த நிலையில், இதனையடுத்து சத்யபாமா காதில் ஏதோ ஒன்று சொல்கிறார். அடுத்த நிமிடமே சத்யபாமா கண்கலங்கி பேசினார். எனவே ராஜ்மோகன் சொல்லித்தான் சத்யபாமா அழுதததாக தகவல் பரவியது.

இதற்கு பதிலடி கொண்டுள்ள அமைச்சர் ராஜ்மோகன், இது மிகப்பெரிய வன்மம், கனிமொழி அக்கா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறேன். அந்த பெண்ணை கடுமையாக விமர்சித்து பேசுகிறார்கள். அவர் மன வலியில் உள்ளார். அதனால் ஆதங்கத்தில் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு நீண்ட நேரமாக முதலமைச்சர் நின்று கொண்டுள்ளார். சீக்கிரமாக பேசி முடிக்க சொல்லுங்கள் என கூறினார்கள். இதனையடுத்து நான் சத்யபாமா காதில் 8 மணி நேரமாக பொதுமக்கள் காத்துக்கொண்டு நிற்கிறார்கள். விரைவாக பேசி முடியுங்கள் என தெரிவித்தேன். இதே போல அமைச்சர் அருண்ராஜ் பேசும்போதும் இதே தகவலை தெரிவித்து இருந்தேன். வேறு எதவும் இல்லை, இப்படி அபாண்டமாக பேசக்கூடாது. சீக்கிரமாக பேசி முடியுங்கள் என தான் சொன்னோம்.

நடந்தது என்ன.? ராஜ்மோகன் விளக்கம்

இப்படி அரசியல் காரணங்களுக்காக அவதூறாக பேசுவதை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மக்களும், முதலமைச்சரும் வெகு நேரமாக காத்திருக்கிறார்கள் இதற்கு முன்னதாக முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், துணை முதலமைச்சராக உதயநிதி இருந்த போது நான் தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தேன். அப்போதும் முதல்வர் வந்து விட்டார். சீக்கிரமாக மற்றவர்களை பேசி முடிக்க சொல்லுங்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுவார்கள். அப்படித்தான் நேற்றும் கூறினார்கள் என ராஜமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

Source: Read Full Article