Chennai FSI: FSI அளவை கூட்டுவதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காவிட்டாலும், 5 அல்லது அதற்கு மேல் உயர்த்த தமிழ்நாடு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களுக்கான தள அளவு உயருமா?

Floor Space Index என்பதன் சுருக்கமே FSI. இது அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் திட்டமிடப்படும் கட்டிடம், எத்தனை மாடிகள் அல்லது எவ்வளவு பெரியதாக இருக்கலாம் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணமாக 3.0 அளவிற்கு FSI அனுமதி அளிக்கப்பட்டால், அனைத்துத் தளங்களிலும் உள்ள மொத்தக் கட்டிடப் பரப்பானது, நிலத்தின் அளவைப் போல் சரியாக 3 மடங்கு இருக்கலாம். பெங்களூரு மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் இந்த குறியீடானது 5-ற்கும் அதிகமாக உள்ளது. ஆனால் சென்னையில் இதன் அடிப்படை குறியீடானது தற்போது வரை வெறும் 3.25 ஆகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அளவை உயர்த்த வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தற்போது அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரீமியம் FSI அளவை உயர்த்த அரசு பரிசீலனை..!

தமிழகத்தில் பிரீமியம் தள அளவிற்கான குறியீட்டின் (FSI) உச்சவரம்பை உயர்த்துவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரம்பை ஐந்து அல்லது அதற்கும் மேலாக உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, 18 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீளமுள்ள சாலைகளில் உள்ள இடங்களுக்கான பிரீமியம் FSI உச்சவரம்பு, சாலையின் அகலத்தைப் பொறுத்து 4.875 வரை எட்டலாம். அதனை உயர்த்தும் பரிசீலனை தான் தற்போது தீவிரமடைந்துள்ளது. பிரீமியம் FSI ஆனது, ஒரு கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் கட்டுமான நிறுவனங்கள் கூடுதல் தளப்பரப்பை உருவாக்க அனுமதிக்கிறது.

FSI அளவை உயர்த்துவதன் பலன்கள் என்ன?

கூடுதலாகக் கட்டப்படும் பகுதியானது அதிக குடியிருப்புகள் அல்லது பரந்த சதுர அடிகளால் கட்டுமான திட்டத்திற்கான நிலையான செலவை குறைக்கிறது. இது வீடு வாங்குபவர்கள் மீது சுமத்தப்படும் ஒரு சதுர அடிக்கான செலவைக் குறைக்க உதவும்

குறைந்த செலவில் வீடுகளை வாங்கவும், அலுவலக பயன்பாட்டிற்காக வணிக தளங்களை வாங்கவும் உதவும்

உயரக் கட்டுப்பாடுகள் காரணமாக சிறிய நிலப்பரப்புகளில் அதிகபட்ச FSI-ஐ அடைவது கடினமாக உள்ளது. இதனால் அங்கு முதலீட்டு செலவானது அதிகமாக உள்ள சூழல் குறையும்

அதிகபட்ச FSI ஆனது சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மற்றும் MRTS வழித்தடங்கள் போன்ற பொதுப் போக்குவரத்து மையங்களுக்கு அருகில் பரவலான குடியிருப்புகளுக்கு வழிவகுக்கும்

இதனால் அதிகமான மக்கள் பொதுப் போக்குவரத்திற்கு அருகில் வாழவும் பணியாற்றவும் வழிவகுத்து, தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதை குறைக்க முடியும்

குடிநீர் வழங்கல், கழிவுநீர் வலையமைப்புகள் மற்றும் பாதசாரிகள் நடைபாதைகள் போன்ற குடிமை மேம்பாடுகளுக்கு நிதியளிக்கும் நோக்கில், மேம்பாட்டாளர்கள் அகலமான சாலைகளுக்காக மாநில அரசுக்கு நேரடியாகக் கட்டணம் செலுத்தி பிரீமியம் FSI-ஐ வாங்குவதால் அரசின் வருவாய் உயரும்

குடியிருப்புகள் தாண்டி சென்னை போன்ற பெருநகரங்களில் இடநெருக்கடி அதிகரித்து வருவதால், புதிய வணிக பயன்பாட்டிற்கான இடம் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. புதிய முதலீடுகளுக்கும் இது சிக்கலாக அமைகிறது. எனவே இருக்கும் இடங்களை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள உயரமான மற்றும் அகலமான கட்டிடங்களை அமைக்க FSI அளவை உயர்த்த வேண்டும் என்பதே தொழில்துறை சார்ந்தோரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படியுங்கள்: MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்

FSI அளவை உயர்த்துவதில் பிரச்னை என்ன?

குடிநீர், மழைநீர் வடிகால், கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் மின்சாரத் திறன் உள்ளிட்ட அடிப்படை நகராட்சிப் பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்தாமல் FSI அளவை உயர்த்துவது சரியான முடிவாக இருக்காது என்பது அதிகாரிகள் தரப்பு கருத்தாக உள்ளது

பொதுப் போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள் விரிவாக்கப்படாவிட்டால், தீவிரமான FSI தளர்வுகள் ஏற்கனவே உள்ள போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கி, உள்ளூர் உள்கட்டமைப்பின் மீதான சுமையை அதிகரிக்கக்கூடும்

சென்னை வளர்ச்சிக்கான மூன்றவாது மாஸ்டர் ப்ளானில் முதன்மைத் திட்டத்திற்காக அதிக அடர்த்தி கொண்ட வழித்தடங்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதும் FSI தளர்வுக்கான தடையாக உள்ளது.

சென்னையில் FSI அளவு:

12 மீட்டர் அகலமான சாலைகளில் FSI குறியீடு 2.0

15 மீட்டர் அகலமான சாலைகளில் FSI குறியீடு 2.5

18 மீட்டர் அகலமான சாலைகளில் FSI குறியீடு 3.25

18 மீட்டர் அகலமான சாலையில் கூடுதல் கட்டணம் மூலம் பெற்றப்படும் ப்ரீமியம் FSI குறியீடு அதிகபட்சமாக 4.875 ஆக உள்ளது

Source: Read Full Article