திருப்பத்தூர்: முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற விடுப்பு எடுத்த காரணத்திற்காக சரியாக பணி செய்ய விடாமல் மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக பணிமனை மேலாளர் மீது அரசு பேருந்து ஓட்டுநர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் நைனார் மகன் கண்ணன் (58). இவர் தர்மபுரி மண்டலம் சேலம் கோட்டம் பணிமனையில் திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் பேருந்தில் ஓட்டுநராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வருடம் கண்ணனின் கால் உடைந்ததால் 25 நாட்கள் விடுமுறை எடுத்தார். அதே போல தனது மகன் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 30 நாள் மருத்துவமனையில் மகனை பாதுகாத்து வந்தார். மேலும், இவருக்கு மெடிக்கல் லீவ் சுமார் இன்னும் 251 நாட்கள் இருக்கும் நிலையில் இதனை கண்டுகொள்ளாமல் பணிமனை மேலாளர் செல்வகுமார் , கண்ணன் பணி செய்த பேருந்தை நிறுத்தி, ‘நீ மற்றொரு பேருந்தில்தான் வேலை செய்ய வேண்டும்” எனக் கூறி பெங்களூரு செல்லும் பேருந்தில் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்த கண்ணன் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதனை அறிந்த, பணிமனை மேலாளர் செல்வகுமார் மற்றும் ‌ செக்கிங் இன்ஸ்பெக்டர் தமிழரசு, கட்டுப்பாட்டாளர் சத்யராஜ் ஆகியோர் இணைந்து, “கலெக்டரே சொன்னாலும் நாங்க சொல்றதுதான் இங்க நடக்கும், நான் சொல்ற பேருந்தில் ஓட்டுனராக வேலை செய்தால் செய், இல்லையென்றால் வேலையை விட்டு கெளம்பு, நீ ரிப்போர்டர்கிட்ட போனா பெரிய ஆளா எங்கள போய் என்ன செய்ய முடியும்’ ‌ என ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த கண்ணன் தனக்குரிய நியாயம் கிடைக்க வேண்டும். மேலும் அதே பேருந்தில் ஓட்டுநராக செயல்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Source: Read Full Article