இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியமனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. இதில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள தமிழக மீனவர்கள் உள்பட 12 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக, 16 மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். -வெளியுறவு துறை சார்பில் பதில் மனு தாக்கல்

பொதுநல வழக்கினைத் தாக்கல்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த‌ நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சூழலில் நீதிமன்றம் விடுதலை செய்தும், அவர்கள் தொடர்ந்து இலங்கையில் காவலில் இருக்கும் நிலை உள்ளது. 24 பேர் அவ்வாறு இருப்பதாக கூறப்படும் நிலையில் 5 பேர் குறித்த விபரங்கள் மட்டுமே தெரிய வந்துள்ளது. எனவே விடுவிக்கப்பட்டும், மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் இலங்கை காவலில் இருக்கும், தமிழக மீனவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மீள்குடியேற்றத்திற்கு 7 நாட்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்முறையை உருவாக்கவும், உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.

விரைவில் இந்தியா திரும்புவர்

இந்த இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், இலங்கை சிறையில் நடந்த கலவரத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் அத்துமீறிஎல்லை தாண்டி நுழைந்து மீன்பிடித்தது உள்ளிட்ட காரணங்களால் கைது செய்யப்படுகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும் இன்னும் பல குற்றச்சாட்டுகளில் தமிழக மீனவர்கள் உட்பட 39 இந்திய மீனவர்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் உள்ளனர். இதில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள தமிழக மீனவர்கள் உள்பட 12 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக, 16 மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். மீதமுள்ள 11 மீனவர்கள், மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை சிறை தண்டனை பெற்று உள்ளனர். இந்தியா- இலங்கை ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் தண்டனை குறைக்கப்பட்டு, விரைவில் இந்தியா திரும்புவர் என வெளியுறவுத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Source: Read Full Article