இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற 2 டெஸ்ட், அதிகாரப்பூர்வமற்ற 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய ஏ அணி ஆடும் போட்டி என்றாலும் ஐபிஎல் நட்சத்திரங்களான சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் ஆகியோர் விளையாடுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது.

276 ரன்கள் டார்கெட்:

இரு அணிகளும் மோதிய அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ தோற்றது. இதையடுத்து, இரு அணிகளும் மோதிய இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி இன்று பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 275 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்காக தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் 13 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் ரன்னிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரிகளாக விளாசி அதிரடியை காட்டினார். ஆனால், அவர் 5 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தனி ஆளாக போராடிய படிதார்:

அடுத்து வந்த வீரர்கள் களத்தில் நின்று ரஜத் படிதாருக்கு பார்ட்னர்ஷிப் தர முயற்சி செய்தாலும் அவர்களால் முடியவில்லை. விக்கெட்டுகள் ஒரு பக்கம் போனாலும் மறுமுனையில் ரஜத் படிதார் அபாரமாக ஆடினார். அவர் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பி ஆஸ்திரேலியாவிற்கு சவால் அளிக்கும் வகையில் ஆடினார்.

அபாரமாக ஆடிய ரஜத் படிதார் அரைசதம் விளாசினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரஜத் படிதார் 6வது விக்கெட்டாக வெளியேறினார். அவர் 81 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வாய்ப்பிற்காக காத்திருப்பு:

ஐபிஎல் தொடரில் கோப்பையே வெல்லாமல் இருந்த ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்து 2 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணி என எந்த வடிவத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவருக்கு தற்போது இந்தியா ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் வகையில் அவர் கடந்த இரு போட்டியிலும் ஆடியுள்ளார். கடந்த போட்டியிலும் அவர் 53 ரன்கள் விளாசினார். இந்த போட்டியிலும் அவர் அரைசதம் விளாசினார்.

கண்டுகொள்ளுமா பிசிசிஐ?

இந்திய ஏ அணிக்காக அவர் தொடர்ந்து சிறப்பாக இந்த தொடரில் ஆடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். வரும் காலத்தில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றும் அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 33 வயதான ரஜத் படிதார் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 63 ரன்களும், 1 ஒருநாள் போட்டியில் ஆடி 22 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக மொத்தமாகவே 4 முறை மட்டுமே ஆடும் வாய்ப்பை பெற்ற ரஜத் படிதார் கடந்த 2024ம் ஆண்டிற்கு பிறகு அணியில் வாய்ப்பு பெறவில்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே அணியில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் ரஜத் படிதார் இந்த தொடரில் சிறப்பாக ஆடி பிசிசிஐ கவனத்தை ஈர்க்க மிகவும் ஆர்வத்துடன் உள்ளார்.

Source: Read Full Article