தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே அவர்களின் செயல்பாடுகள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த கால திமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தேர்தல் பரப்புரையின்போது முன்வைத்த விஜய், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

அன்பில் கைது, கே.என்.நேரு வீட்டில் ரெய்டு:

கடந்த திமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக உலா வந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு ரூபாய் 100 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியில் நகராட்சி அமைச்சராக பொறுப்பு வகித்த கே.என்.நேரு பணி நியமனம் வழங்குவதற்காக ரூபாய் 634 கோடி வரை லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுங்கட்சிக்கு எதிராக சதி செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தீவிர விசாரணை:

தவெக ஆட்சி அமைந்த 4 மாத காலத்திற்குள்ளே திமுக-வின் பல்வேறு முக்கிய தலைவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும், அன்பில் மகேஷ் பாேன்ற முக்கிய நிர்வாகிகளின் கைதும் அரங்கேறி வருகிறது. கடந்த கால ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஒவ்வொருவரின் துறையிலும் நடந்த ஊழல்கள், பணப்பரிமாற்றத்தின் பட்டியலை தவெக அரசு தீவிரமாக விசாரித்து எடுத்து வருகிறது.

இதனால், அடுத்து தவெக அரசின் ரெய்டும், கைதும் தங்கள் பக்கம் திரும்புமோ? என்று முன்னாள் அமைச்சர்கள் சிலர் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசும்போதும் சில ஆவணங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதைத் திறக்கும்போது தெரியும் என்று பேசியிருந்தார்.

கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்:

எதிர்க்கட்சியினரும் கோப்புகளைத் திறந்து நடவடிக்கை எடுங்கள் என்று சவால் விட்டிருந்தனர். தற்போது ஒவ்வொரு கோப்புகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை தவெக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக-வை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியில் உள்ள சீனியர்கள் சிலரை ஓரங்கட்டிவிட்டு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு வழங்க உதயநிதி திட்டமிட்டு வருகிறார்.

இந்த சூழலில், இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினால் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடுமோ? என்று சில முக்கிய திமுக தலைவர்களும் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அரங்கேறும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article