தஞ்சாவூர்: தஞ்சையில் ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு 3 கிலோ சின்ன வெங்காயம் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அட்டகாசமான பஞ்ச் டயலாக்குடன் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அசத்தினார் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன். இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்து இருந்தனர் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிறுவனத்தினர்.

“ஹெல்மெட் போடலேன்னா ஃபைன்... ஹெல்மெட் போட்டா ஆனியன்!” என்ற வித்தியாசமான பஞ்ச் டயலாக்குடன் தஞ்சையில் போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி வாகன ஓட்டிகளிடையே கவனம் பெற்றது. ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு 3 கிலோ சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) பரிசாக வழங்கி போக்குவரத்து போலீசார் ஆச்சரியப்படுத்தினர்.

தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வித்தியாசமான முறையில் வழங்கப்பட்ட இந்த ‘ஆனியன் கிஃப்ட்’ பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், விழிப்புணர்வையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியது.

ஹெல்மெட்டுக்கு ‘ஆனியன்’ பரிசு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொதுமக்களை வெறுமனே அறிவுறுத்துவதற்கு பதிலாக, அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை என்றதும் பதற்றம்... பரிசு என்றதும் ஆச்சரியம்!

சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களையும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தியதும் சில வாகன ஓட்டிகள் வழக்கமான வாகன சோதனைதான் என நினைத்து சற்று பதற்றத்துடன் நின்றனர்.

ஆனால், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக 3 கிலோ சின்ன வெங்காயம் வழங்கப்பட்டதும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

“ஹெல்மெட் போடலேன்னா ஃபைன்... ஹெல்மெட் போட்டிருக்கிறதால ஆனியன்!” என்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனின் பஞ்ச் டயலாக் அங்கு அனைவரின் முகத்திலும் மலர்ச்சியை ஏற்படுத்தியதுடன், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் அழுத்தமாக எடுத்துரைத்தது.

‘பிள்ளைங்க அடம் பிடிச்சா வாங்கித் தராதீங்க வேக வாகனத்தை!’

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்து மட்டும் போலீசார் அறிவுரை வழங்கவில்லை. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வாகனம் ஓட்டுவது தொடர்பாகவும் பெற்றோருக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

“பிள்ளைங்க அடம் பிடிச்சா வாங்கித் தராதே வேக வாகனம்!” என்ற வாசகத்துடன், வயது வராத குழந்தைகளுக்கு வாகனங்களை ஓட்டக் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், “சின்ன வயசு பிள்ளைக்குக் கொடுக்காதே ரேஸ் பைக்... லைசன்ஸ் இல்லாமல் ஓட்ட விட்டால் பெற்றோருக்கும் போலீஸ் கேஸ்!” எனவும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.

வேகத்துக்கு முன் உயிரை நினைத்துப் பாருங்கள்!

அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 16 பேர் கைது செய்யப்பட்டதுடன் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தையும் போலீசார் சுட்டிக்காட்டினர்.

சாலையில் சில நிமிட ‘சாகசம்’ வாழ்க்கை முழுவதும் சுமையாக மாறிவிடக்கூடும் என்பதால், இளைஞர்கள் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஜோதி அறக்கட்டளைக்கு பாராட்டு

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர் செய்திருந்தனர். பொதுமக்களுக்கு வழக்கமான அறிவுரைகளை மட்டும் வழங்காமல், சின்ன வெங்காயம் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருளை பரிசாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

“ஹெல்மெட் தலையை காப்பாற்றும்... ஆனியன் வீட்டை பார்த்துக்கொள்ளும்!” என்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியது.

சாலையில் செல்லும்போது அபராதத்தை தவிர்ப்பதற்காக மட்டுமல்லாமல், குடும்பத்தை நினைத்து ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது. ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பயணிப்போம்; வயது வராத பிள்ளைகளின் கைகளில் வாகனத்தை கொடுக்காமல் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்போம் என்பதே போலீசாரின் அறிவுரையாக இருந்தது.

Source: Read Full Article