தமிழகத்தில் தற்போது இரண்டு விஷம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரம் மற்றொன்று தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் தப்பியோடியது தான்.

வலிப்பு வந்தது போல் நடிப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர். இதனை நம்பி சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, மறைந்திருந்த கைதிகள் திடீரென காவலர்களை தாக்கிவிட்டு லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 சிறை கைதிகள் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

17 சிறை கைதிகள் தப்பியோட்டம்

இந்த தாக்குதலில் ஒரு சிறைக் காவலருக்குத் தலையில் பலத்த காயமும், மேலும் இரு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காவலர்கள் தாக்கப்பட்டதில் சிறை வளாகத்தில் ரத்தம் சிதறிக்கிழந்த காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

17 தனிப்படைகள் அமைப்பு

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் மற்றும் தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி ஆகியோர் சிறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து சிறை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிடிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகள்

தப்பியோடியவர்களில் பலர் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என வெளியாகியுள்ள தகவலையடுத்து, அந்த மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட சிறைச்சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி சர்வ சாதாரணமாக 17 சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தப்பி ஓடியவர்களில் பிரவீன் என்ற ஒரு குற்றவாளியை போலீசார் துரத்திப் பிடித்துள்ளனர். மேலும் ஒரு குற்றவாளியும் பிடிக்கப் பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Source: Read Full Article