Anbil Mahesh Arrested: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்பில் மகேஷ் கைது..!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, 100 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதால், முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்ததை தொடர்ந்து, உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்பு காவல் ஆணையகரத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு, ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்ட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நள்ளிரவு 12.30 வரை கடும் வாதம் - திமுக போராட்டம்

சிறப்பு நீதிமன்றம் எஸ்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திமுக சார்பில் வில்சன் உள்ளிட்ட முக்கிய வழக்கறிஞர்கள் ஆஜராகினார். அப்போது, “முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் அனுமதி பெற வேண்டியது அவசியம். அப்படி எந்த அனுமதியும் இன்றி அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வீட்டிலிருந்தபோது, சட்ட விதிகளை மீறி அந்த அலுவலகத்திற்குள்ளேயே நுழைந்து கைது செய்துள்ளனர். இது வழக்கறிஞர்களுக்கு விடுக்கப்பட்ட சவால். பள்ளிகள் தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதல் அடிப்படையிலேயே இந்த வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், CMDA அனுமதி உள்ளிட்ட அன்பில் மகேஷின் அதிகார வரம்பை மீறிய குற்றச்சாட்டுகள் தற்போது அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அமைச்சர் ஒருவர் மட்டுமே கையெழுத்திட்டால் மட்டுமே இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் என்பது அரங்கேறிவிடாது. அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர். அவரது வீட்டில் நடந்த சோதனைக்கு பிறகு நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகி 8 மணி நேரம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல.காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில், உடனடியாக கைது நடவடிக்கை ஏன்?” என திமுக வழக்கறிஞர்கள் பல்வேறு விவரங்களை முன்வைத்து வாதிட்டனர்.

ரூ.400 கோடி வரை மோசடிக்கு வாய்ப்பு:

அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜான் சத்யன், “அன்பில் மகேஷின் வழக்கறிஞர் வளாகத்திற்கு வெளியே போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். அதன் பிறகே உள்ளே சென்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே இந்த கைதில் எந்த விதிமீறலும் இல்லை. இந்த ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன. அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவரை விடுவித்தால் சாட்சிகளை கலைக்கவும், அழிக்கவும் வாய்ப்புள்ளது. 100 கோடி ரூபாய் அல்ல 400 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கருதுகிறோம். பணப்பரிமாற்றம் நடந்ததற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன” என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அன்பில் மகேஷை சிறையிலடைக்க உத்தரவு:

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முன்ஜாமின் கோரிய மனு மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துகளையும் கேட்டு, அன்பில் மகேஷை நவம்பர் 6ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். புழல் சிறையில் முதல் தர வகுப்பு சிறையில் அடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு, அதற்கேற்ற உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய திமுக வழக்கறிஞர் சரவணன், “இந்த வழக்கு போலியானது. அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article