கும்பகோணம்: கும்பகோணம் ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் வினோத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், சாலை வசதி, குடிநீர்த் தொட்டி சீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பல ஆண்டுகளாகச் சாலை வசதியின்றித் தவிக்கும் மக்கள்

கும்பகோணம் ஒன்றியம், கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம் பகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அமைச்சர் வினோத் ரவி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகச் சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருவதாகவும், புதிய சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், சாலைப் பணிகளுக்கான மதிப்பீடுகளைத் தயாரித்து, திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அப்பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியைச் சீரமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அங்கன்வாடி மையத்தில் உணவின் தரம் ஆய்வு

தொடர்ந்து, கொரநாட்டுக்கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டுப் பார்த்த அவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், அங்கன்வாடி மையத்துக்குக் கொண்டுவரப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

இதையடுத்து, அப்பகுதியில் வயல்வெளியில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களையும், வாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களையும் சந்தித்தார். அவர்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கக் கோரிக்கை

தொடர்ந்து, ஏரகரம் பகுதிக்குச் சென்ற அமைச்சர் வினோத், அப்பகுதி மக்களிடம் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, தங்களது பகுதிக்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்குப் பதிலாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஆய்வின்போது, கிராம ஊராட்சிகள் திட்ட இயக்குநர் தேவநாதன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஜோதி வில்லியம், உதவிப் பொறியாளர்கள் அய்யப்பன், ரவி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்டப் பொருளாளர் விஜய்சந்திரன், மாநகரச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அந்தந்த ஒன்றிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

அமைச்சரின் ஆய்வு குறித்து மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக குடிநீர், சாலை வசதிகள் பற்றி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது அதற்கு அமைச்சர் தீர்வு அளிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Source: Read Full Article