கும்பகோணம்: தஞ்சை–விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அதிவேகம், எதிர்திசையில் பயணித்தல், முறையற்ற முந்துதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க முக்கியச் சந்திப்புகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயண நேரத்தைக் குறைக்கும் புதிய சாலை!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் வழியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரை செல்லும் சாலையில், பல இடங்களில் சாலை குறுகலாக இருப்பதுடன், சாலையோரங்களில் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. குறிப்பாக, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்துக்குச் செல்ல ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை ஆகிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தஞ்சாவூர்–விக்கிரவாண்டி சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் முதல் சோழபுரம் வரை ஒரு பிரிவாகவும், சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரை இரண்டாவது பிரிவாகவும், சேத்தியாத்தோப்பு முதல் விக்கிரவாண்டி வரை மூன்றாவது பிரிவாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலில் இருந்து சேத்தியாத்தோப்பு வரையிலான இரண்டு பிரிவுகளில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால், புதிய பைபாஸ் சாலையில் அரசு பேருந்துகள், கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தடையின்றிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. பயண நேரம் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிவேகத்தால் விபத்து அபாயம்

புதிய சாலை அகலமாகவும் சீராகவும் அமைந்துள்ளதால், சில வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், சிலர் எதிர்திசையில் வாகனங்களை இயக்குவது, முறையற்ற வகையில் முந்திச் செல்வது, முக்கியச் சந்திப்புகளில் கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவது போன்ற விதிமீறல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால், சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூர்–விக்கிரவாண்டி பைபாஸ் சாலையின் முக்கிய இணைப்புப் பாதைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்திப்புகளில் நவீன கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதுடன், நெடுஞ்சாலையில் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதன்படி, சாலையின் முக்கியப் பகுதிகளில் நெடுஞ்சாலை ஓய்வு மையங்கள், நவீன உணவகங்கள், சுத்தமான கழிப்பறைகள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், விபத்துகள் ஏற்படும் நேரங்களில் விரைந்து செயல்படுவதற்காக ஆம்புலன்ஸ் மற்றும் பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் இழுவை வாகன வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

புதிய நான்கு வழிச்சாலை பயண நேரத்தைக் குறைப்பதுடன், பாதுகாப்பான பயணத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினரும் காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article