2026 ஆசிய விளையாட்டு - ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

2026 ஆசிய விளையாட்டுகள்

ஜப்பானின் அய்ச்சி நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, தடகளம், கிரிக்கெட், கபடி என அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்தியா அசத்தல்

மகளிர் ஹாக்கி, மகளிர் கபடி, துப்பாக்கி சுடுதல், காம்பவுண்ட் வில்வித்தையின் 3 பிரிவுகள் ஆகியவற்றில் தங்க பதக்கங்கள் வென்ற இந்தியா, இதுவரை ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 22 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தமாக 63 பதக்கங்களை பெற்று தரவரிசை பட்டியலில் 8-ஆம் இடம் வகிக்கிறது. அதிலும் குறிப்பாக நேற்று (செப்.30) ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியது.

புள்ளிப்பட்டியல்

151 தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ள சீனா மொத்தம் 277 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 200 பதக்கங்களுடன் ஜப்பான் 2-வது இடத்திலும், 103 பதக்கங்களுடன் தென்கொரியா 3-வது இடத்திலும் உள்ளது. கடந்த வாரம் வரை புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திற்கு கீழ் இருந்த இந்தியா, தற்போது 59 பதக்கங்களுடன் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் முதன்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடம் பிடித்த இந்தியா இம்முறை எந்த இடத்தை பிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

இலங்கையை பந்தாடிய இந்தியா

ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 169 ரன்களை குவித்தது. இந்தியா தரப்பில் இஷான் கிஷன் அதிகப்பட்சமாக 79 ரன்களை குவித்தார். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 45 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், அரையிறுதி ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது.

இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

ஏற்கனவே முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில், இலங்கையை வீழ்த்திய இந்திய அணி வருகிற 3ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் லீக் ஆட்டத்திற்கே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் சூழலில், தற்போது ஆசிய விளையாட்டின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுவது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக தூண்டியுள்ளது. இறுடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை இந்தியா வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Source: Read Full Article